×

மிளகாய் வத்தலுக்கு கூடுதல் விலை இல்லை: விவசாயிகள் விரக்தி

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலத்தில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் மிளகாய் மார்க்கெட் சந்தை நடைபெறும் கொரோனா தொற்று காரணத்தால் விவசாயிகள் கொண்டு வந்த மிளகாய் மூடைகளுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர். அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழகத்தில் மிளகாய் அதிகம் விளையும் பகுதிகளில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியாகும். இங்கு நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிகமாக மிளகாய் விவசாயம் நடைபெறுகிறது. இந்தாண்டு மிளகாய் ஓரளவு விளைந்த போதும் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வரும் மிளகாய் வத்தலை வெளியூர்களில் இருந்து வரும் வியாபாரிகள் சிண்டிக்கேட் அமைத்துக் கொண்டு விலை ஏற்றத்தை தடுத்து மிகவும் குறைவான விலைக்கே கொள்முதல் செய்கின்றனர்.

ஆர்.எஸ்.மங்கலம் மிளகாய் சந்தை தமிழகத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்றதாகும். மதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, பட்டுகோட்டை, தஞ்சாவூர், விருதுநகர், சிவகாசி, திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் இங்கு வந்து மிளகாய் வத்தலை கொள்முதல் செய்து செல்கின்றனர். இந்தாண்டு ஆரம்பத்தில் 10 கிலோ எடை கொண்ட மிளகாய் வத்தல் சுமார் ரூ.1200 முதல் 1400 வரை ஏலம் போனது. ஆனால் கொரோனா தடை உத்தரவால் சில மாதங்களாக வெளியூர் வியாபாரிகளும் வரவில்லை சந்தையும் நடைபெறவில்லை இந் நிலையில் கடந்த சில வாரங்களாக கமிஷன் கடைகள் மூலமாக ஒரு சில வியாபாரிகள் மிளகாயை கொள்முதல் செய்கின்றனர்.

இரண்டு வாரங்களாக நடைபெற்ற மிளகாய் மார்க்கெட்டில் ரூ.800 முதல் ரூ.900 வரை மட்டுமே விற்பனையானது. ஆகையால் கூடுதல் விலை கிடைக்கும் என்று ஆவலுடன் மிளகாய் வத்தலை விற்பனைக்கு கொண்டு வந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர். அரசே விவசாயிகளிடம் மிளகாய் வத்தலை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Chili currant, no price, farmers
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை