×

கழிவுநீரில் இருந்து மின்சாரம் தயாரிப்பு: மதுரையில் கல்லூரி பேராசிரியர், மாணவர்கள் அசத்தல்

மதுரை: மதுரையில் கழிவுநீரில் இருந்து மின்சாரம் தயாரித்து கல்லூரி பேராசிரியர், மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
தற்கால அறிவியல் உலகில் பல கண்டுபிடிப்புகள் ஒவ்வொரு நாளும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. அவைகளால் பல நன்மைகள் மக்களுக்கு கிடைத்தாலும் இயற்கை சார்ந்தும் சுற்றுப்புறச்சூழல் சார்ந்தும் பல தீமைகள் ஏற்படுகின்றன. மாற்றாக, இயற்கையைச் சிதைக்காத ஓர் அறிவியல் கண்டுபிடிப்பு தான் தற்காலத்தில் தேவையாக இருக்கிறது. மின்சாரம் இல்லாத உலகை கற்பனை செய்து பார்க்கவும் முடியாது. இதனால் மின்சாரத்தின் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே வருகிறது.

அதேபோலவே மின்சாரத்திற்காக செலவாகும் பணமும் பன்மடங்காகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இந்த சூழலில், மதுரை அமெரிக்கன் கல்லூரி உதவிப்பேராசிரியர் இம்மானுவேல் சுரேஷ், (நுண்ணுயிரியல் துறை), மற்றும் அவரது மாணவர்கள் அபுபக்கர் சித்திக், ஹரிமுரளி ஆகியோர் கழிவுநீரில் இருந்து மின்சாரத்தை கண்டுபிடித்து அசத்தி உள்ளனர். இவர்களை கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் மற்றும் நுண்ணுயிரியல் துறைத்தலைவர்கள் முனைவர் ஜோசப் தத்தேயஸ், உதவிப்பேராசிரியர் ஆன்ட்ரூ பிரதீப் ஆகியோர் ஊக்கப்படுத்தி பாராட்டி உள்ளனர்.

இதுகுறித்து உதவிப்பேராசிரியர் இம்மானுவேல் சுரேஷ் கூறும்போது, ‘‘நமது வீட்டுச்சாக்கடை நீரிலிருக்கும் எம்எப்சி (மைக்ரோபையல் பியூல் செல்) எனப்படும் எரிசக்தித்திறன் கொண்ட நுண்ணுயிரிகளின் ஆற்றலால் மின்சாரத்தை தயாரிக்க முடியும். 1 லிட்டர் அளவு சாக்கடையிலிருக்கும் எம்எப்சி செல்கள் மூலம் 980 எம்வி என்ற அளவில் மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இயற்கையைச் சிதைக்காத ஒரு கண்டுபிடிப்பாகும். இந்த கண்டுபிடிப்பை விரிவாக ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டும் என்பதே எங்களது விருப்பம்’’ என்றார்.



Tags : Madurai , Waste Water, Electricity Production, Madurai, College Professor, Students
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...