×

கல்லூரி பருவத் தேர்வுகளை ரத்து செய்யக்கோரிய மனு: 2 வாரங்களில் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணை..!!!

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. கல்லூரிகளை பொறுத்தவரை, கடந்த மார்ச் மாதம் நடக்க இருந்த  பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டன. ஊரடங்கு தற்போது தளர்த்தப்பட்டுள்ளதை தொடர்ந்து, இந்த பருவத்தில் நடத்தப்பட வேண்டிய கல்லூரி, பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் பல்கலைக்கழக மானியக்குழு  விதிமுறைப்படி, கட்டாயம் நடத்தப்பட வேண்டும். இறுதியாண்டு மாணவர்களின் இறுதி செமஸ்டர்களை செப்டம்பர் மாத இறுதிக்குள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் நடத்தி முடிக்க வேண்டும் என மத்திய அரசு  வலியுறுத்தியுள்ளது.

இதற்கிடையே, சென்னை கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தற்போதுள்ள சூழலில், இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு எழுதுவது சாத்தியமில்லாத ஒன்றாகும்.  மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அனைத்து விதமான படிப்புகளுக்கான கல்வியாண்டு காலம் கடந்த பின்னரும், மாணவர்கள் இறுதித் தேர்வுக்குக் காத்திருக்கின்றனர். படிப்பை முடித்த பின்னரும், இறுதி தேர்வை எழுதாமல் காத்திருப்பது,  மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

சட்டப்படிப்பு போன்ற கல்வியை முடித்தவர்கள், அவர்களுக்கான அமைப்புகளில் பதிவு செய்வது பாதிப்படையும். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம், நோய்த் தொற்றின் உச்சநிலை இன்னும் எட்டவில்லை என்று கூறியுள்ளது. ஜூலை மாத  இறுதியில் தொற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். தினந்தோறும் நோயின் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. பெரும்பாலான கல்லூரிகளின் கட்டிடங்கள்,  கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.

 இப்போதுள்ள சூழலில், நடப்பு கல்வியாண்டிற்கு,  கல்லூரிகள், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற நிலை தெரியவில்லை. அதனால், கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மாணவர்களின் இறுதி செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.  முந்தைய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் மற்றும் அகமதிப்பீட்டு அடிப்படையில் மதிப்பெண் வழங்கி, தேர்ச்சி பெற்றதாக அறிவித்திட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்த சென்னை  உயர்நீதிமன்றம், மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் மற்றும் யூசிஜி 2 வாரங்களில் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.


Tags : Governments ,State ,cancellation ,Central ,Chennai High Court , Petition seeking cancellation of college term examinations: High Court orders Central and State Governments to respond within 2 weeks .. !!!
× RELATED நீட் தேர்வை மாநில அரசுகளின்...