6 மாதத்தில் தயாரித்த விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக அனுப்பி சாதனை படைத்தது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்!

டோக்கியோ : ஐக்கிய அரபு அமீரகம் முதன்முறையாக செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பி சாதனை புரிந்துள்ளது. அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா ஆகிய நாடுகள் மட்டுமே விண்கலங்களை செவ்வாய் கிரகத்திற்கு ஆய்வுக்கு அனுப்பி சாதனை புரிந்துள்ளன. இந்த வரிசையில், தற்போது ஐக்கிய அரபு அமீரகம் அரசும் இணைந்துள்ளது. கடந்த வாரமே இந்த விண்கலம் ஏவப்பட திட்டமிடப்பட்டிருந்தது ஆனால் மோசமான வானிலையால் விண்ணில் செலுத்தப்படவில்லை.

இந்நிலையில் ஜப்பானில் உள்ள தனேகாஷிமா ஏவுதளத்தில் இருந்து எச் 2 ஏ ராக்கெட் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தின் விண்கலம் தனது 7 மாத பயணத்தை தொடங்கியது. 7 மாதங்கள் புவி வட்டப் பாதையில் பயணிக்கும் இந்த விண்கலம் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தை சென்றடையும்.அங்கு ஏறத்தாழ 675 நாட்கள் இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய உள்ளது. இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் காலநிலை மற்றும் பருவநிலைகளை ஆராயும்.மேலும் தண்ணீரை உருவாக்க தேவையான ஹைட்ரொஜன், ஆக்சிஜன் ஆகியவை செவ்வாயில் இருந்து வெளியேறி கொண்டே இருப்பது எப்படி என்பது குறித்து அமீரகத்தின் விண்கலம் ஆய்வு நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்கைக்கோள் செவ்வாய் கிரகத்தின் சூழல் குறித்து புதிய அறிவியல் தகவல்களை வழங்கும். கொலராடோபல்கலைக்கழகத்தில் உள்ள விண்வெளி இயற்பியல் மையத்திலும், துபாயில் உள்ள முகமது பின் ரஷீத் விண்வெளி மையத்திலும் இந்த செயற்கைக்கோள் உருவாக்கத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.அமெரிக்க நிபுணர்களிடம் பயிற்சி பெற்ற அமீரகத்தின் பொறியாளர்கள் இந்த விண்கலத்தை 6 மாதத்தில் உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>