×

கடன் மோசடி நபர்கள் பட்டியல் வெளியீடு நீரவ் மோடி, மல்லையா உள்ளிட்டோரின் 2,426 நிறுவனங்கள் 1.47 லட்சம் கோடி பாக்கி: பொதுத்துறை வங்கிகள் சங்கம் தகவல்

சென்னை: பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கி வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்தவர்கள் பட்டியலை, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ளவை, பெரும் தொழிலதிபர்களுக்கு சொந்தமான 2,426 நிறுவனங்கள். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை உள்ள கடன் மோசடி விவரம் இது. இவை, 17 பொதுத்துறை வங்கிகளுக்கு தராமல் மோசடி செய்துள்ள கடன் ரூ.1,47,350 கோடி. வழக்கம்போல் இந்த மோசடி பட்டியலில் நீரவ் மோடி, மல்லையா, வின்சம் குழுமம் ஆகியவை தவறாமல் இடம்பெற்றுள்ளன. ரூ.500 கோடி மற்றும் அதற்கு மேல் கடன் பாக்கி வைத்துள்ளவை 33 கணக்குகள். மொத்த தொகையில் இவர்களின் கடன் பாக்கி மட்டும் ரூ.32,737 கோடி. இந்த 33 மோசடி பட்டியலில், டாப் 10க்குள் உள்ள நிறுவனங்கள் வைத்துள்ள பாக்கி மட்டும் ரூ.17,005 கோடி.

இதில் அதிகபட்சமாக, பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ.4,644 கோடி பாக்கி வைத்துள்ளது நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்‌ஷியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் அண்ட் ஜூவல்லரி. இதை தொடர்ந்து, பாரத ஸ்டேட் வங்கிக்கு ஏபிஜி ஷிப்யார்டு லிமிடெட் ரூ.1,875 கோடி, யூகோ வங்கிக்கு ரெய் அக்ரோ லிமிடெட் ரூ.1,745 கோடி, பாரத ஸ்டேட் வங்கிக்கு ருசி சோயா நிறுவனம் ரூ.1,618 கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு கிலி இந்தியா லிமிடெட் ரூ.1,447 கோடி பாக்கி வைத்துள்ளன. சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவுக்கு ஜதின் மேத்தாவின் வின்சம் டயமன்ட் ரூ.1,390 கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு குடோஸ் கெமி லிமிடெட் ரூ.1,301 கோடி, நட்சத்ரா பிராண்ட்ஸ் ரூ.1,109, விண்சம் டயமன்ட்ஸ் ரூ.892 கோடி, கோடி பாரத ஸ்டேட் வங்கிக்கு கோஸ்டல் பிராஜக்ட்ஸ் லிடெட் ரூ.984 கோடி பாக்கி வைத்துள்ளன. இவை கடன் மோசடியில் டாப் 10 பட்டியலில் உள்ள நிறுவனங்கள்.

இவற்றில் குடோஸ் கெமி லிமிடெட் குடோஸ் கெமி லிமிடெட் சென்ட்ரல் பாங்க் இந்தியாவுக்கு ரூ.509 கோடி, சந்தீப் ஜூஜூன்வாலா மற்றும் சஞ்சய் ஜூஜூன்வாலாவின் ரெய் அக்ரோ நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.672 கோடி பாக்கி வைத்துள்ளன. இதுதவிர, ரூ.500 கோடிக்கு மேல் உள்ள கடன் பாக்கி பட்டியலில் விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் ரூ.586 கோடி பாக்கி வைத்துள்ளது. டாப் 33 கடன் மோசடி பட்டியலில் வேறு சில வங்கிகளுக்கு உள்ள கடன் பாக்கியையும் சேர்த்து ரெய் அக்ரோ ரூ.2,417 கோடி, வின்சம் டயமண்ட்ஸ் ரூ.2,918 கோடி, ரோட்டோமேக் குளோபல் நிறுவனம் ரூ.1,574 கோடி பாக்கி வைத்துள்ளன.

வராக்கடன் காரணமாக வங்கிகளின் நிதி நிலை, குறிப்பாக, பொதுத்துறை வங்கிகள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றன. வங்கிகள் நிதி தள்ளாட்டத்துக்கு ஆளாகியுள்ள நிலையில்,மெகுல் சோக்‌ஷி, விஜய் மல்லையா உள்ளிட்டோரின் ரூ.68,000 கடன் ஒத்திவைக்கப்பட்ட விவகாரம் கடந்த ஏப்ரலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில், வங்கிகள் சங்கம் புதிய கடன் மோசடி பட்டியல் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. இந்த கடன் மோசடி அப்பாவி மக்களிடம் நிகழ்த்தப்பட்ட மோசடி என அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

* மோசடிக்கு ஆளான டாப் மூன்று வங்கிகள்
வங்கிகள் சங்கம் வெளியிட்ட பட்டியலின்படி, 17 வங்கிகளில் கடன்தராமல் மோசடி செய்த பெரும் தொழிலதிபர்களின் 2,426 நிறுவனங்களில், அதிகபட்சமாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் 325 நிறுவனங்கள் மோசடி செய்துள்ளன. மொத்த கடன் பாக்கி ரூ.22,370 கோடி. இதற்கு அடுத்ததாக, பாரத ஸ்டேட் வங்கியில் 685 நிறுவனங்கள் ரூ.43,887 கோடி கடன் மோசடி செய்துள்ளன. பாங்க் ஆப் பரோடாவில் 355 நிறுவனங்கள் மொத்தம் ரூ.14,661 கோடி கடன் மோசடி செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : companies ,Public Sector Banks Association Neerav Modi ,Mallya ,Public Sector Banks Association , Debt Fraudsters, List Release, Neerav Modi, Mallya, 2,426 Companies, 1.47 Lakh Crores, Debt, Public Sector Banks Association, Information
× RELATED மருந்து நிறுவனங்களிடமும் பாஜக அதிக நன்கொடை..!!