×

அமெரிக்க பிரபலங்கள் கணக்கில் அத்துமீறி நுழைய டிவிட்டர் ஊழியர்களுக்கு லஞ்சம் தந்த ஹேக்கர்கள்: பரபரப்பு தகவல் அம்பலம்

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, பில்கேட்ஸ், ஜோ பிடென் போன்றவர்களின் டிவிட்டரில் கணக்கில் ஹேக்கர்கள் அத்துமீறி நுழைய, இந்நிறுவன ஊழியர்கள் லஞ்சம் வாங்கியதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.
உலகின் முக்கிய சமூக வலைதளங்களான வாட்ஸ்அப், பேஸ்புக் ஆகியவற்றில் அவ்வபோது ஊடுருவும் ஹேக்கர்கள், இந்த முறை அமெரிக்க பிரபலங்களின் டிவிட்டரில் நுழைந்து மோசடியில் ஈடுபட்டது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் நடந்த இந்த பாதுகாப்பு மீறலானது சமூக வலைதளங்களில் நடந்த மீறல்களில் இதுவரை இல்லாத வகையில் மிகப் பெரியதாகும். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, தற்போதைய அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் உள்ளிட்ட பல பிரபலங்களின் டிவிட்டர் கணக்குகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதில், டிவிட்டர் நிறுவன ஊழியர்களின் உதவி குறித்து அமெரிக்க உளவு நிறுவனமான எப்பிஐ விசாரித்து வருகிறது. அதே நேரம் இதற்கு பொறுப்பேற்றுள்ள சிலர், டிவிட்டர் நிறுவன ஊழியர் ஒருவருக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறி அது தொடர்பான பதிவுகளை டிவிட்டரின் நிர்வாகக் குழுவில் பகிர்ந்துள்ளனர். இதுதொடர்பாக டிவிட்டர் நிறுவனத்தின் அறிக்கையில், 100க்கும் மேற்பட்டோரின் கணக்குகள் குறிவைக்கப்பட்டதாகவும், பிட்காயின் பணப்பரிமாற்றம் சம்பந்தப்பட்ட மோசடிக்கு பயன்படுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளது. 130 பேரின் கணக்குகளை திருடிய ஹேக்கர்ஸ், அவர்களது கணக்கில் இருந்து பின் தொடர்பவர்களுக்கு டிவிட் செய்துள்ளனர். இதனால், டிவிட்டரின் பங்கு சுமார் 1 சதவீதம் சரிந்துள்ளது.
கிரிப்டோ கரன்சி என்ற மோசடிக்காக இந்த கணக்குகள் திருடப்பட்டிருக்கலாம் என்றும் எப்பிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது.

* மோடியை பின்தொடர்வோர் எண்ணிக்கை 6 கோடி ஆனது
பிரதமர் மோடி சமூக வலைதளமான டிவிட்டர் கணக்கை கடந்த 2009ம் ஆண்டு தொடங்கினார். அப்போது, அவரை 2,354 பேர் பின்தொடர்ந்தனர். டிவிட்டரில் தற்போது மிகவும் அதிகம் பிரபலமான தலைவராக அவர் இருந்து வருகின்றார். அவரது பெரும்பாலான உரைகள் டிவிட்டரில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டில் மோடியின் டிவிட்டரை 5 கோடி பேர் பின் தொடர்ந்தனர். பிரதமர் அலுவலக டிவிட்டர் கணக்கை 3.7 கோடி பேர் பின்தொடர்கின்றனர். தற்போது பிரதமர் மோடியை டிவிட்டரில் பின்தொடருவோரின் எண்ணிக்கை 6 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல்், இன்ஸ்டாகிராமில் 4.5 கோடி பின் தொடர்கின்றனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை டிவிட்டரில் 1.5 கோடி பேர் பின்தொடர்கின்றனர். சமூக வலைதளங்களில் மிகவும் அதிகளவாக, அமெரிக்க அதிபர் டிரம்ப்பை 8 கோடி பேர் பின்தொடர்கின்றனர்.

Tags : Hackers ,celebrities ,American , American Celebrities, Account, Log In, Twitter Employee, Bribery, Hackers, Exposed
× RELATED தனிமை வாழ்க்கைஉயிருக்கே ஆபத்து: உளவியல் ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை