×

நடிகர் அஜீத் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

சென்னை: நடிகர் அஜீத்குமார், தனது மனைவி ஷாலினி மற்றும் மகளுடன்  கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு இல்லாததால் நடிகர் அஜீத் வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில், எழும்பூரில் உள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் மதியம் அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய மர்ம நபர், ‘நடிகர் அஜீத் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளேன். இன்னும் சற்று நேரத்தில் அது வெடிக்கும், முடிந்தால் காப்பாற்றுங்கள்’ என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டார்.

இதுகுறித்து கட்டுப்பாட்டு அறையில் இருந்த போலீசார் உயர் அதிகாரிகளுக்கும், வெடிகுண்டு நிபுணர்களுக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜீத் வீட்டிற்கு சென்று ஒரு மணி நேரத்திற்கு மேல் சோதனை நடத்தினர். ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து இது வெறும் புரளி என தெரியவந்தது. போலீசார் விசாரணையில் மிரட்டல் விடுத்த நபர் மரக்காணம் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரன் (26) என்பதும், அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரியவந்தது.

விசாரணையில், புவனேஸ்வரன் 3 மாதங்களுக்கு முன்பு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வீட்டிற்கும், கடந்த மாதம் முதல்வர் எடப்படி பழனிசாமி வீட்டிற்கும், நடிகர் ரஜினி மற்றும் விஜய் வீடுகளுக்கும் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் என்பது தெரியவந்தது. இவரிடம் இருந்த செல்போனை பெற்றோர் பிடுங்கி வைத்துள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம், தனது உறவினர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் உள்ளார். அவரிடம் பேச வேண்டும், என செல்போனை வாங்கிய புவனேஸ்வரன், நடிகர் அஜீத் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. அவர், மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என்பதால் இதற்கு  முன்பு பலருக்கு மிரட்டல் விடுத்தபோது போலீசார் எச்சரித்து அனுப்பி உள்ளனர். ஆனால் அவர் தொடர்ந்து இதுபோல் மிரட்டல் விடுத்து வருவதால் போலீசார் புவனேஸ்வரனை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Ajith ,house , Actor Ajith's house, bomb threat, youth, arrested
× RELATED தனது ஜனநாயக கடமையை ஆற்ற முதல் ஆளாக வருகை தந்த நடிகர் அஜித்!