திருவில்லிபுத்தூர், காரைக்குடி பகுதியில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு வாழைகள், செடிகள் ‘கத்தரிப்பு’: விவசாயிகள் வேதனை

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர், காரைக்குடி பகுதியில் வெட்டுக்கிளிகளால் வாழை மற்றும் செடிகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே படிக்காசு வைத்தான்பட்டி கிராமம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், உள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களில் அதிகளவு வாழை பயிரிட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் வழக்கத்திற்கு மாறாக வெட்டுக்கிளிகள் அதிகளவு சுற்றித்திரிகின்றன. இவைகள் வாழை இலைகளையும், வாழைக்காய்களையும் கடித்து சேதப்படுத்துகின்றன. சுமார், 1,200க்கும் மேற்பட்ட வாழை மரங்களில் வெட்டுக்கிளிகள் தங்கி, இலைகள், காய்களை சேதப்படுத்துகின்றன. தகவலறிந்து திருவில்லிபுத்தூர் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘வெட்டுக்கிளிகள் இந்த பகுதியை சேர்ந்தவைதான். வேறு எங்கிருந்தும் வரவில்லை. இதற்கு முன் வாழை இலைகள், வாழைக்காய்களை கடிக்காது. இந்த முறை கடித்து சேதப்படுத்தி உள்ளது. உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம்’’ என்றனர்.

காரைக்குடியிலும் பாதிப்பு : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சங்கராபுரம் பகுதியில் வீடுகளை சுற்றிலும் தோட்டம், மாடித்தோட்டம் அமைத்துள்ளனர். வீட்டின் முன்புறம் உள்ள பகுதிகளில் மரங்கள் மற்றும் செடிகள் உள்ளன. நேற்று முன்தினம் முதல் இப்பகுதியில் வீட்டின் முன்புறம் இருந்த செடிகள் மற்றும் மரங்களில் வெட்டுக்கிளிகள் ஆங்காங்கே தென்பட்டன. தற்போது ஒவ்வொரு செடியிலும் 100க்கும் மேற்பட்ட வெட்டுக்கிளிகள் உள்ளன. மேலும், வீடுகளில் உள்ள செடிகளையும் விட்டு வைக்கவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், ‘‘கடந்த 2 நாட்களாக வெட்டிக்கிளிகள் படையெடுப்பு அதிகரித்துள்ளது. எருக்கலை செடிகளையே அதிகளவில் சேதப்படுத்தி உள்ளன. நேற்று முதல் வீடுகளில் உள்ள கீரை, கத்திரி, ரோஜா போன்ற செடிகளிலும் அமர்ந்துள்ளன.  மற்ற மாநிலங்களில் விளைநிலங்களில்  பாதிப்பு ஏற்படுத்திய பாலைவன வெட்டுக்கிளிகள் இப்பகுதியில் முகாமிட்டுள்ளனவா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது’’என்றனர்.

Related Stories: