×

கோயில் திருவிழாக்களில் பக்தர்களுக்கு தடை: யூடியூப் மூலம் ஒளிபரப்பலாம்; கமிஷனர் பணீந்திரரெட்டி உத்தரவு

சென்னை: கோயில்களில் திருவிழாக்களை நடத்த இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது. அதே நேரத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதித்து கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக இந்து அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி அனைத்து கோயில் அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பட்டியல் சார்ந்த மற்றும் பட்டியல் சாராத கோயில்களில் நடைபெறும் பூஜைகள் மட்டுமல்லாது திருவிழாக்கள் நடத்துவது முக்கியம்.

ஒவ்வொரு கோயிலுக்கும் குறிப்பிட்ட திருவிழாக்கள் சிறப்படையதாகவும், பக்தர்கள் அதிக அளவில் வந்து சுவாமி/அம்மனை தரிசனம் செய்யும் நிகழ்ச்சியாகவும் இருந்து வருகிறது. கொரோனா பரவலை அடுத்து பொதுமக்கள் நலனை முன்னிட்டு கோயில்களில் அரசு வழிகாட்டுதலின்படி பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை.  இந்தநிலையில், கோயில்களில் நடைபெற வேண்டிய திருவிழாக்களுக்கு தலைமையிடத்தின் அனுமதி கோரியும், உற்சவ திருவிழா நிகழ்வுகளை யூடியூப் சேனல் மூலம் பதிவேற்றம் செய்ய அனுமதி வேண்டி முன்மொழிவுகள் சார்நிலை அலுவலர்களிடம் வந்த வண்ணம் உள்ளன.

இது தொடர்பாக வழங்கப்படும் அறிவுரைகள் பின்வருமாறு:
* கோயில்களில் பழக்கவழக்கப்படி நடைபெறும் திருவிழாக்களுக்கு தலைமையிடத்தின் அனுமதி பெற வேண்டியதில்லை.
* திருவிழாக்கள் தொன்று தொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வரும் பழக்க வழக்கங்கள் படி மாறுதல் ஏதுமின்றி கோயில் வளாகத்துக்குள் நடைபெற வேண்டும்.
* திருவிழாக்கள் கோயில்களில் சொற்ப அளவிலான கோயில் பணியாளர்களை கொண்டு முகக்கவசம் அணிந்து 6 அடி சமூக இடைவெளி கடைப்பிடித்து நடைபெற வேண்டும்.
* இவ்விழாக்களில் உபயதாரர்கள், பக்தர்கள் கலந்து கொள்ள கண்டிப்பாக அனுமதியில்லை.
* திருவிழாக்கள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி ஏதும் பெற வேண்டியிருப்பின் அவ்வனுமதியை பெற்று திருவிழாக்கள் நடத்தப்பட வேண்டும்.
* இவ்விழாக்களை பக்தர்கள் தங்கள் இல்லங்களில் இருந்து காணும் வகையில் வலைதள நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Panindra Reddy ,devotees ,temple festivals , Temple festival, ban on devotees, can be broadcast on YouTube; Commissioner Panindrareddy, Order
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு...