×

ஆழ்குழாய் கிணறுகளில் நீர்மட்டம் குறைந்ததால் பயிர்கள் சாகுபடி செய்ய முடியாத அவலம்: விவசாயிகள் கவலை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் 49,227 ஹெக்டேர் பரப்பளவில் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. பருவமழை பொய்த்ததாலும், நிலத்தடிநீர் முற்றிலும் வறண்டதாலும் 20,500 ஹெக்டேர் பரப்பாக சாகுபடி குறைந்துள்ளது.     இதனால், நெல் சாகுபடி நிலங்கள் தரிசு நிலங்களாக கால்நடை மேய்ச்சலுக்கு மட்டுமே பயன்படுகிறது. இம்மாவட்டத்தில் உள்ள ஏரிகள் அனைத்தும் வறண்டு கிடப்பதால், அதன் கால்வாய்கள் மூலம் நீர்ப்பாசனம் பெற்று வந்த, மானாவாரி விவசாயிகளும், நெல் பயிரிட முடியாமல் சோகத்தில் மூழ்கி உள்ளனர். இம்மாவட்டத்தில் கூவம், மப்பேடு, செய்யம்பாக்கம், கண்ணூர் உட்பட பல்வேறு இடங்களில் உள்ள ஏரிகளில், பருவமழை பெய்தால் மட்டுமே ஏரிகள் நிரம்பும். இந்த ஏரிகளின் கண்மாய்கள் மூலம், பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெரும். இந்த ஏரிகள் அனைத்தும் நிரம்பி பல ஆண்டுகள் ஆகிறது. இதனால், நெல் பயிரிட போதுமான தண்ணீரின்றி மானாவாரி விவசாயிகள் தங்களது நிலங்களை காயவிட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக பருவ மழை பொய்த்து விட்டதால் அப்பகுதியிலுள்ள ஏராளமான கிணறுகள், ஆழ்குழாய்களும் வறண்டுவிட்டன. கிணறுகளை ஆழப்படுத்தியவர்களும், கூடுதலாக ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தவர்களும் கடன் பெற்றதுதான் மிச்சம். தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் பலர் வேறு வேலைகளுக்கு சென்றுவிட்டனர். விவசாயம் மட்டுமே தெரிந்த விவசாயிகள் மழைக்காக காத்துக்கொண்டு இருக்கின்றனர். இவ்வாறு, திருவள்ளூர் மாவட்டத்தில் நெல் சாகுபடி பரப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. இந்தாண்டு, பருவமழை பெய்து, ஆறு, ஏரிகள் நிரம்பினால்தான் நிலத்தடி நீர் மட்டம் மேலோங்கும். அப்போது தான், விவசாயிகள் நம்பிக்கையுடன் நெல் சாகுபடி செய்ய முடியும்.

* லாபம் இல்லை
விவசாயி ஒருவர் கூறுகையில், ஆறு ஏக்கரில் நெல் விவசாயம் செய்திருந்தேன். நெல் சாகுபடியில் ஒரு ஏக்கருக்கு, 30-45 மூட்டை நெல் கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு, ரூ.35 ஆயிரம் செலவு செய்தால், ரூ.25 ஆயிரத்துக்கு நெல் விற்கும். இதனால், லாபமும் கிடைப்பதில்லை. தற்போது வறட்சி ஏற்பட்டுள்ளதால் விவசாயம் செய்யவே பயமாக இருக்கிறது என்றார்.

Tags : Trench well, low water level, cultivation of crops, plight, farmers worried
× RELATED தமிழ்நாட்டில் இன்று 13 இடங்களில் 100...