×

வாலாஜாபாத் பகுதியில் அதிகரிக்கும் சுகாதார சீர்கேடு: கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகம்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேரூராட்சி இங்கு 15 வார்டுகள் உள்ளன. வாலாஜாபாத் சுற்றிலும் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன இந்த கிராமங்களில் உள்ளவர்கள் வாலாஜாபாத் வந்துதான் இங்கிருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம், சுங்குவார்சத்திரம், உள்ளிட்ட பல்வேறு நகர்ப்புற பகுதிகளுக்கு நாள்தோறும் அரசு பணி மற்றும் தனியார் தொழிற்சாலைகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் வாலாஜாபாத்தில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ராஜவீதி, பேருந்து நிலையம், காவல் நிலையம், ஒன்றிய அலுவலகம், தாலுகா அலுவலகம் ஆகிய மக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த பகுதிகளில் சுகாதார சீர்கேடு அதிகரித்து காணப்படுகிறது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், வாலாஜாபாத் சுற்றிலும் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த வாலாஜாபாத் நகர்ப் பகுதியில் செயல்பட்டுவரும் அரசு அலுவலகங்கள் தனியார் அலுவலகங்களில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் தங்கள் பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் அலுவலக நுழைவாயில்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் பன்றிகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் காணப்படுகின்றன. தற்போது பன்றிகளை அகற்ற எந்தவித நடவடிக்கையும் பேரூராட்சி நிர்வாகம் எடுக்காததால் பன்றிகள் தற்போது கூட்டம் கூட்டமாக வீடுகள், கால்வாய்கள், அலுவலகங்கள் முன்பாக சுகாதார சீர்கேட்டை விளைவிக்கும் வகையில் சுற்றித்திரிகிறது.

தற்போது வாலாஜாபாத் நகர்ப் பகுதிகளிலும் கிராமப்புறங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து காணப்படும் நிலையில்  பன்றிகளால் மேலும் சுகாதார சீர்கேடுகள் நோய்தொற்று அதிகரித்து காணப்படும் சூழல் நிலவுவதாக இப்பகுதி சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை பேரூராட்சி நிர்வாகம் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை .மேலும் மக்கள் கூடும் இடங்களில் சுகாதார சீர்கேட்டை தவிர்க்கும் வகையில் பிளீச்சிங் பவுடர், கிருமி நாசினி போன்றவற்றையும் தெளிப்பது இல்லை. இதுபோன்ற சூழ்நிலையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மக்கள் கூடும் இடங்களில் அவ்வப்பொழுது கிருமிநாசினி  தெளித்தால் பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர்.

Tags : area ,Walajabad ,administration , Walajabad area, increasing, health disorder, municipal administration
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...