×

கொரோனா ஊரடங்கால் களையிழந்த காஞ்சி மாநகரம்: மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது

காஞ்சிபுரம்: உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா கோரத்தாண்டவத்தால் அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கம் காஞ்சிபுரத்தில் நெசவாளர்கள் மற்றும் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது. எப்போதும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளால் நிறைந்து காணப்படும் காஞ்சிபுரம் மாநகரம் கொரோனா ஊரடங்கால் வெறிச்சோடி காணப்படுகிறது. இதற்காக காஞ்சி நகரில் ஆண்டுதோறும் ஏராளமான விழாக்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றை காண சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமின்றி வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்து செல்வர்.

பிரசித்திபெற்ற வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரமோற்சவம், ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர பெருவிழா, காமாட்சி அம்மன் கோயில் பிரமோற்சவம், கைலாசநாதர் கோயில், குமரகோட்டம் முருகன் கோயில், கச்சபேஸ்வரர் கோயில், பிறப்பு முதல் இறப்பு வரை மனிதர்கள் வணங்க வேண்டிய பிறவாதீஸ்வர், இறவாதீஸ்வரர், தென்னிந்தியாவிலேயே தனியாக கோயில் உள்ள சிறப்பு பெற்ற சித்ரகுப்தர் கோயில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், திரை உலக புள்ளிகள் உள்ளிட்ட ஏராளமானோர் தங்கள் வழக்குகளில் இருந்து விடுபட நாடி செல்லும் வழக்கறுத்தீஸ்வரர் கோயில் என ஏராளமான கோயில்கள் காஞ்சிபுரத்தில் உள்ளன.

மேலும் உலக புகழ் பெற்ற காஞ்சிபுரம் கைத்தறிப்பட்டு காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உற்பத்தி செய்யப்படுவதால் காஞ்சிபுரம் நகரம் எப்போதும் வெளியூர் பயணிகள் மற்றும் பக்தர்களால் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் கடந்த மார்ச் இறுதி வாரத்தில் இருந்து கொரோனா தாக்கத்தால் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகையின்றி காஞ்சிபுரம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. இதனால் பட்டு சேலை வியாபாரம் படுபாதாளத்துக்கு சென்றதால் இதனை நம்பி வாழும் நெசவாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறி ஆகியுள்ளது. எனவே, அரசு குறிப்பிட்ட நேரத்தில் கோயில்களை திறந்து சமூக இடைவெளியுடன் பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Tags : corridor ,Corona ,city ,Kanchi , Corona Curfew, Kanchi City, People Nomadism
× RELATED கோவை, திருச்சியில் ரூ.3 ஆயிரம் கோடியில்...