மதுராந்தகம் அருகே பெய்து வரும் மழையால் நிரம்பியது ஈசூர்-வள்ளிபுரம் பாலாறு தடுப்பணை

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், ஈசூர்-வள்ளிபுரம் பாலாறு தடுப்பணை நிரம்பியது. மதுராந்தகம் அருகே பாலாற்றின் குறுக்கே ஈசூர், வள்ளிபுரம் ஆகிய கிராமங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தடுப்பணை கட்டப்பட்டது. இந்த அணை, சுமார் ஒரு கிலோமீட்டர் நீலமும் 5 அடி உயரமும் கொண்டது. தற்போது, இப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது விட்டு விட்டு நல்ல மழை பெய்து வந்தது. இந்த மழையின் காரணமாக தடுப்பணை சுமார் நான்கரை அடி உயரத்திற்கு நிரம்பியுள்ளது. இதன் காரணமாக இப்பகுதி மக்கள், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த தடுப்பணையில் இருந்து பாலாற்றில் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.  இதனால், ஆற்றின் ஒரு கரையில் உள்ள ஈசூர், புதூர், பள்ளிப்பட்டு, எல்.என்.புரம், படாளம், பழையனூர் மற்றும் மறுகரையில் உள்ள வள்ளிபுரம், ஆனூர் உள்ளிட்ட பல கிராமங்களில் போதிய நிலத்தடி நீர் தற்போது உயர்ந்துள்ளது. இதனால், இந்த கிராமங்களில் பயிர் செய்யப்படும் நெல், வாழை, கரும்பு போன்ற விவசாயத்திற்கு போதிய தண்ணீர் கிடைத்து விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும் நம்பிக்கையில் உள்ளனர். நிலத்தடி நீர் உயர்ந்துள்ளதால், அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தியாகியுள்ளது. இதேபோன்ற, தடுப்பணையை இந்த பாலாற்றின் குறுக்கே மேலும் சில இடங்களில் குறிப்பிட்ட இடைவெளியில் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: