×

வேலை வாய்ப்புகள் குறைந்ததால் விவசாயத்துக்கு மாறிய பழங்குடிகள்

கூடலூர்: மசினகுடி அடுத்து உள்ளது பொக்காபுரம். சோலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட இப்பகுதியில் தொட்லிங்கி, குரும்பர் பள்ளம்,  குரும்பர் பாடி கோவில்பட்டி, தக்கல் உள்ளிட்ட ஐந்து கிராமங்களில் 600க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள்  வசித்து வருகின்றன. பெரும்பாலான மக்கள் கால்நடை வளர்ப்பு, விவசாயம் ஆகியவற்றில் ஈடுபட்டு வந்துள்ளனர். கடந்த பல வருட காலமாக இப்பகுதியில் விவசாயம் பெரிய அளவில் கவனிப்பாரின்றி கைவிடப்பட்டு குறிப்பிட்ட சிலர் மட்டுமே விவசாயத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இக்கிராமங்களில் சுற்றுலா விடுதிகள் ஏராளமாக உருவாகியது. சுற்றுலா சார்ந்த தொழில்கள் விரிவடைந்தது பெரும்பாலானவர்கள் இந்த தொழில்களுக்கு மாறினர்.

இதில் நல்ல வருமானத்தை ஈட்டி வந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு வருடகாலமாக யானை வழித்தடங்கள்  சம்பந்தமான உயர்நீதிமன்ற உத்தரவு காரணமாக இப்பகுதிகளில் உள்ள சுற்றுலா விடுதிகள் மூடப்பட்டன.  இதனால் பெரும்பாலானோர் வேலை வாய்ப்புகளை இழந்தனர். தொடர்ந்து கொரோனா பாதிப்பு காரணமாக வேலை தேடி வெளியிடங்களுக்கு செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. உள்ளூரில் வேலை வாய்ப்புகள் வெகுவாக  குறைந்தது . இதையடுத்து இங்குள்ளவர்கள் மீண்டும் அவர்களது பாரம்பரிய தொழிலான விவசாயத்திற்கு மாறியுள்ளனர்.

கடந்த பல வருட காலமாக காடுமேடாக கிடந்தநிலங்களை பண்படுத்தி ராகி, சோளம் போன்ற தானிய வகைகளையும் பூண்டு, பீன்ஸ், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறி பயிர்களையும் பயிரிடத் தொடங்கியுள்ளனர். தென்மேற்குபருவ மழை தொடங்கியுள்ள நிலையில் மழை மறைவுப் பிரதேசமான இப்பகுதியில் விவசாயத்திற்கு தேவையான மழைப்பொழிவு கிடைத்துள்ளதால் மீண்டும் விவசாய தொழிலில் ஈடுபட்டு உள்ளதாகவும், தொழில் வாய்ப்புகள் குறைந்து உணவு தேவைக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் விவசாயம் தங்களை பாதுகாத்து கைகொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.  

மேலும் இப்பகுதி விவசாயிகள் விளைவிக்கும் விளை பொருட்களுக்கு சந்தைப்படுத்துதல் வசதிகளை அரசு செய்து தர வேண்டும் என்றும், இங்கு விளையும் பொருட்களை ஊட்டியில் உள்ள விற்பனை நிலையங்களுக்கு கொண்டு செல்ல பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் போக்குவரத்து வசதி இல்லாத நிலையில் உள்ளதாகவும் விவசாயத்திற்கான உதவிகளை தனியார் தொண்டு அமைப்பு ஒன்று வழங்கி வருவதாகவும் இங்குள்ள விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags : Tribes , Jobs, tribes that have switched to agriculture
× RELATED வேளாண் கடவுளர் நால்வர்