×

வனத்துறை அலட்சியத்தால் மேட்டூர் வனப்பகுதியில் அழிந்து வரும் விலங்குகள்: பொதுமக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

மேட்டூர்: மேட்டூர் வனச்சரகத்தில் வனத்துறையினர் அலட்சியம் காரணமாக வனவிலங்குகள் வேட்டை தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேட்டூர் வனச்சரகத்தில் வனவாசிமலை, பாலமலை, கொளத்தூர், தண்டா உள்ளிட்ட வனப்பகுதிகள் உள்ளன. இங்கு மான், முயல்கள் மற்றும் பல்வேறு பறவையினங்கள் வசித்து வருகின்றன. இவற்றை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது. வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதால் வனப்பகுதிகளில் வனவிலங்குகளின் எண்ணிக்கை கனிசமாக குறைந்து வருகிறது. அண்மை காலமாக முயல்வேட்டை அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் 29ம் தேதி ஜலகண்டபுரம் அருகே சூரப்பள்ளியைச் சேர்ந்த ராஜ்கண்ணு மகன் சத்யராஜ்(34) என்பவர், தனது நண்பர்களான இளங்கோ மற்றும் தினேஷ் ஆகியோருடன் முயல் வேட்டைக்கு சென்றுள்ளனர். அப்போது, துப்பாக்கியுடன் வந்த 7 பேர் கும்பல், “எங்கள் பகுதியில் நீங்கள் எப்படி முயல் வேட்டையாடலாம்” என கேட்டு தகராறு செய்து, வேட்டையாடிய முயல் மற்றும் துப்பாக்கியை பறித்துச் சொன்றனர். இதுகுறித்து புகாரின்பேரில், கருமலைக்கூடல் போலீசார் விசாரித்து, துப்பாக்கியை பறித்துச்சென்றதாக வழக்குப்பதிந்து 7 பேர் கும்பலை கைது செய்தனர்.

ஆனால், முயல் வேட்டையாடிய சத்யராஜ் உள்ளிட்டவர்கள் மீது எவ்வித வழக்கும் பதியவில்லை. இவர்கள் மீது வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வனத்துறைதான் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என போலீசார் கூறுகின்றனர். இதுகுறித்து மேட்டூர் வனச்சரகரிடம் கேட்டபோது, போலீசார் வழக்கிலேயே அவர்களுக்கு தண்டனை கிடைக்கும். எனவே, வனத்துறை வழக்குப்பதிய தேவையில்லை என்று பொறுப்பை தட்டிக்கழிக்கிறார். இதனால், முயல் வேட்டையாடிவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : forest ,Mettur , Forest Department, Mettur Forest, endangered animals
× RELATED பழநி வனப்பகுதி எல்லைகளில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு