நாளை ஆடி அமாவாசையை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் நடத்த தடை!: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!!!

திருநெல்வேலி: கொரோனா தொற்று பரவலின் காரணமாக இராமேஸ்வரம் மற்றும் தாமிரபரணி ஆற்றில் திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை ஆடி அமாவாசையை முன்னிட்டு முக்கிய நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்கப்படுவது வழக்கமான ஒன்றாகும்.  தற்போது கொரோனா பரவல் காரணமாக இந்த தடை உத்தரவானது மாவட்ட ஆட்சியரால் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே உற்பத்தியாகி தமிழகத்திலேயே கடலில் கலக்கக்கூடிய ஒரே புண்ணிய நதி தாமிரபரணி நதியாகும். திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் என்ற இடத்தில் சமவெளி பகுதியில் தொடங்கி, நதியானது தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் அருகே கடலில் கலக்கிறது. சுமார் 123 கி.மீ நீண்ட பயணம் செய்யும் இந்த தாமிரபரணி நதிக்கரைவோரத்தில் பல பிரசித்தி பெற்ற இந்து ஆலயங்கள் உள்ளன.

இந்த ஆலயங்களில் ஆண்டுதோறும் படித்துறைகளில் ஆடி அமாவாசை நாளில் அதிகாலையிலிருந்தே பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி தங்களது குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கும், மற்றும் மறைந்த உறவினர்களுக்கும் திதி, தர்ப்பணம் மற்றும் மேலும் பல முக்கிய சம்பிரதாய சடங்குகளை செய்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து, அந்த புண்ணிய நதியில் நீராடுவதும் வழக்கமாக ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால், தற்போது தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக தமிழக முழுவதும் ஏற்கனவே, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாலும், முன்னோர்களுக்கு திதி போன்ற சடங்குகளை செய்யும் போது தொற்று பெரிதளவு பரவ வாய்ப்பிருப்பதாலும், நெல்லை மாவட்ட ஆட்சியரால் தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நெல்லை மாவட்டத்தில் அதிகமாக கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால், மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்கப்படவேண்டும் எனவும் ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதேபோல், இராமேஸ்வரம் பகுதிகளிலும் மக்கள் அனைவரும் ஆடி அமாவாசையை முன்னிட்டு திதி உள்ளிட்ட பல்வேறு சடங்குகளை மேற்கொள்வது வழக்கம். இதனால், இராமேஸ்வரத்திலும் மாவட்ட ஆட்சியரால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பவானி கூடுதுறை, திருச்சி, குமரி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் திதி தர ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>