×

சுருளியாறு மின்நிலைய குடியிருப்புப் பகுதியில் விபரீதம்: படையெடுக்கும் யானைகள்; படமெடுக்க ‘பறக்கும்’ சிறுவர்கள்

கூடலூர்: சுருளியாறு மின்நிலைய குடியிருப்பு பகுதியில் காட்டுயானைகள் கூட்டமாக நடமாடுகின்றன. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர். தேனி மாவட்ட சுற்றுலாத்தலமான சுருளி அருவி அருகே சுருளியாறு மின் நிலையம்  உள்ளது. இது மேகமலை வன உயிரின சரணாலய பகுதியாகும். மின்நிலைய வனப்பகுதியை ஒட்டி ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை, கொட்டைமுந்திரி, மா உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ளன. யானை, காட்டு எருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் இரவு நேரங்களில் உணவுதேடி விளைநிலத்தில் புகுந்து பாழ்படுத்துகின்றன.

சுருளியாறு மின்நிலைய குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களிலேயே காட்டுயானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கூட்டமாக வனத்திலிருந்து வெளியேறும் யானைகள் குடியிருப்பு பகுதியிலேயே சில மணிநேரம் சுற்றுகின்றன. இதனால் மின்நிலைய குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனர். மின்நிலைய பணியாளர்கள் உயிர்பயத்துடனே பணிக்கு செல்கின்றனர். இப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘மின்நிலைய குடியிருப்பில் சுமார் 70 குடும்பங்களுக்கு மேல் உள்ளோம். குடியிருப்பு பகுதியில் பகல் நேரங்களிலேயே யானைகள் நடமாட்டம் உள்ளதால் வீட்டை விட்டு வெளியே வரவோ,

குழந்தைகளை வெளியே விளையாட விடவோ பயமாக உள்ளது. வெளியே விளையாடச் செல்லும் சில சிறுவர்கள் ஆபத்தை அறியாமல் கூட்டமாக வரும் காட்டுயானைகளை செல்போனில் படம் பிடிக்கின்றனர். ஏதாவது விபரீதம் நடந்தால் என்ன ஆவது? எனவே, யானைகள் குடியிருப்பு பகுதிக்கு வருவதை வனத்துறையினர் தடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : boys ,Disaster ,area ,Spiral Power Station , Spiral Power Station Residence, Invading Elephants, Boys
× RELATED மஞ்சும்மல் பாய்ஸ் ரூ.200 கோடி வசூல்