×

குமரி மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளை மருத்துவமனையில் சேர்க்க 4 நாட்கள் தாமதம் ஆகிறது

* பாதிப்பை கட்டுப்படுத்த வழியின்றி அதிகாரிகள் திணறல்
* ஒத்துழைக்க மறுப்போரால் நோய் தீவிரமடையும் அபாயம்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது பரிசோதனை மற்றும் அதில் தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவரை மருத்துவமனையில் சேர்க்க 4 நாட்கள் வரை ஆகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றவர்களுக்கு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆய்வகம் ஒன்றிலும் ஆர்டிபிசிஆர் எனப்படும் கொரோனா தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனை நடைபெறுகிறது. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரியில் தினசரி 1500 முதல் 2000 பரிசோதனைகள் நடத்தப்படுகிறது.

 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சளி மாதிரி சேகரிக்கப்படும் ஒருவருக்கு மூன்றாவது நாள் இரவுதான் முடிவு தெரிவிக்கப்படுகிறது. மேலும் அடுத்த 24 மணிநேரம் முதல் 48 மணி நேரம் கடந்த பின்னர்தான் ஆம்புலன்ஸ் மூலம் வீட்டில் இருந்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வருகின்றனர். அங்குபதிவு செய்த பின்னர் இரவு கோவிட் கேர் சென்டர் அல்லது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கும் பல மணி நேரங்கள் செலவிடப்படுகிறது. முன்னதாக ஆம்புலன்சிலேயே மணிக்கணக்கில் இருக்க வேண்டியுள்ளது. இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவர் 4 முதல் 5 நாட்கள் கடந்த பின்னர்தான் மருத்துவமனை கட்டுப்பாட்டில் வருகிறார்.

இந்த இடைப்பட்ட நான்கு நாட்கள் இடைவெளி என்பது பெரும்பாலான நோயாளிகளுக்கும் ஏற்படுகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மாதிரிகள் சேகரிக்கப்பட்ட பின்னர் சளி மாதிரிக்கு வரிசை எண் போடப்பட்ட பின்னர், அன்று இரவுதான் அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. வரிசை எண் பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. இவை தவிர சளி மாதிரிகள் எண்ணிக்கை அதிகரித்தபோதிலும் அதே அளவு பணியாளர்கள், அதே அளவு கருவிகளுடன்தான் பரிசோதனை நடைபெறுகிறது. பரிசோதனை கருவிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதுடன் கூடுதல் பணியாளர்களையும், வாகனங்களையும் ஈடுபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளது.

இதனை போன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை அழைத்து வர 108 ஆம்புலன்ஸ் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. நோயாளிகள் வேறு வாகனங்களிலோ, தங்களது சொந்த வாகனங்களிலோ மருத்துவமனைக்கு வர அனுமதியில்லை. 108ல் 4 வாகனங்கள் மட்டுமே தற்போது இதற்கு பயன்படுத்தப்படுகிறது.  நாள் ஒன்றுக்கு 100 நோயாளிகள் வரை கண்டறியப்படுகின்ற நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள இவர்கள் அனைவரையும் இந்த 4 வாகனங்களில் மட்டுமே விடிய விடிய எடுத்த செல்ல வேண்டிய நிலை உள்ளதால் தொற்று உறுதி செய்யப்பட்ட பின்னரும் ஓரிரு நாட்கள் கடந்த பின்னர்தான் வீடுகளில் இருந்து மருத்துவமனைக்கு சென்றடையும் நிலை உள்ளது.

இந்த காலதாமதங்கள் காரணமாக கொரோனா பரிசோதனைக்கு சளி மாதிரிகள் கொடுத்தவர்கள் பரிசோதனை முடிவுகள் வரும் வரை வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளாமல் வெளியிடங்களில் சகஜமாக வலம் வருகின்றனர்.
இதனால் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு தொற்று இருந்தாலும் அடுத்தடுத்த நாட்களில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும், அருகே உள்ள வீடுகளில் வசிப்போருக்கும்  பரவி விடுகிறது. இவர்களை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் இயலாமல் அதிகாரிகள் திணறுகின்றனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் கண்டறியப்பட்டால் அவர் வந்த பாதை, பழகிய நபர்கள், தொடர்புகள் ஆகியவற்றை கண்காணிக்க ஒவ்வொருவருக்கும் ரூட்மேப், புளோசார்ட் போன்றவை தயார் செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.

தற்போது கொத்துக்கொத்தாக கொரோனா தொற்று பரவி வருவதாலும், யாரிடம் இருந்து தொற்று பரவியது என்பது கண்டறிய முடியாமலும் அதிகாரிகள் திணறுகின்றனர். இதுவே மாவட்டத்தில் தொற்று அதிகரிக்க காரணமாக கூறப்படுகிறது.
 ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் ஒருவர் மட்டும் பாதிக்கப்பட்ட பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றப்படுவது இல்லை. 3 முதல் 5 நபர்களுக்கு மேல் பாதிக்கப்பட்டால் மட்டுமே அந்த இடத்தை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றுகின்றனர். இதனால் ஓரிரு நபர்களுக்கு தொற்று பரவிய இடங்கள் பின்னர் ஒரு தொற்று தொகுப்பு மையமாக மாறி விடுகின்றன.

எனவே பரிசோதனை முடிவுகளை விரைவாக அறிவித்தல், தொற்று கண்டறியப்பட்டவர்களை உடனுக்குடன் மருத்துவமனையில் சேர்த்தல், கோவிட் கேர் சென்டர்களில் வசதிகளை அதிகப்படுத்தி பாதுகாப்பை பலப்படுத்துதல், இதற்கு கூடுதல் பணியாளர்களை நியமித்து கொரோனா நோயாளிகளை கையாளுவதில் அரசு மட்டத்தில் உள்ள குறைகளுக்கு விரைந்து தீர்வு காண்பதன் மூலம் மட்டுமே குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த இயலும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

உணவுடன் மது பாட்டில்கள் சப்ளை
அரசு மருத்துவமனை, கொரோனா கேர் சென்டர்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு வீடுகளில் இருந்து உணவு எடுத்துவர அனுமதிக்கப்படுகிறது. அவ்வாறு உணவு கொண்டு வருகின்றவர்கள் கூடவே தங்களுக்கு வேண்டியவர்களுக்காக மதுபாட்டில்களையும் உணவு பொட்டலங்களில் மறைத்துவைத்து கொடுத்து விடுகின்றனர். உணவு பொட்டலங்களை எடுத்து செல்லும் பணியாளர்களால் இவற்றை கண்காணிக்க முடிவதில்லை. மதுபோதையில் தனிமை முகாம்களில் இருக்கின்றவர்கள் பிரச்னைகளை ஏற்படுத்த தொடங்குகின்றனர். சக நோயாளிகளுக்கும் தொல்லை கொடுக்கின்றனர். கொரோனா காரணமாக குடும்பத்தை பிரிந்து தங்கியுள்ளவர்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகின்றனர்.

நெகட்டிவ் முடிவுகள் அறிவிக்கப்படுமா?
பரிசோதனைகளில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அவருக்கு முடிவு தெரிவிக்கப்படுகிறது. தொற்று இல்லை என்பதை யாருக்கும் தெரிவிப்பதில்லை. முடிவு அறிவிப்பதில் நாட்கணக்கில் ஏற்படுகின்ற தாமதம் காரணமாக பலரும் தங்களுக்கு தொற்று இல்லை என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றனர். எனவே நெகட்டிவ் முடிவுகளையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும், அதில் தனிமைப்படுத்தல் அவசியம் உள்ளவர்களுக்கு அந்த விபரத்தை தெரிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

வீடுகளில் தனிமை முகாம்கள் சாத்தியமா?
ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டாலும் நோய் அறிகுறிகள் இல்லாதவர்களை அவர் தனது வீட்டில் சுயமாக தனிமைப்படுத்திக்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதால் அதனை குமரிமாவட்டத்தில் செயல்படுத்த அதிகாரிகள் ஆர்வம்காட்டாத நிலை உள்ளது. பரிசோதனைக்கு சளி மாதிரிகள் கொடுத்தவர்களே வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளாமல் சகஜமாக உலா வருகின்றனர். கோவிட் கேர் சென்டரில் தங்க வைக்கப்பட்ட பின்னரும் ஒருவர் சுவர் ஏறி குறித்து புரோட்டா வாங்க வெளியேறியது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை வீடுகளில் தங்க வைப்பதை கேள்விக்குறியாக்கியுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகள் தோறும் போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்த இயலாது என்பதுடன் சுய கட்டுப்பாடு இல்லாதவர்கள் ஒவ்வொருவரையும் வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிப்பது சிரமம் என்பதும் இதற்கு காரணம் என்பதால் தனிமை முகாம்கள் ஏற்படுத்தப்படுகிறது. இருப்பினும் மாவட்டத்தில் உள்ள கோவிட் கேர் சென்டர்கள் அனைத்தும் நிரம்பும் நிலையில் வீடுகளிலேயே தனிமை முகாம்கள் திட்டம் செயல்பாட்டிற்கு வர வாய்ப்பு உள்ளது.

கோவிட் கேர் சென்டரில் கண்காணிப்பு இல்லை
குமரி மாவட்டத்தில் கோவிட் கேர் சென்டர்கள் அமைக்கப்பட்டு வரும் நிலையில் இதனை முறையாக கண்காணிக்காத நிலை தொடர்கிறது. இம்மையங்களில் தங்கியிருப்பவர்கள் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பது போன்ற நடைமுறைகள் இருந்தபோதிலும் அதனை யாரும் கண்டுகொள்ளாமல் உணவு வழங்கப்படும் இடங்களில் கூட்டம் கூட்டமாக வந்து நிற்பது, தங்கள் அறைகளை விட்டு வெளியேறி கூட்டம் கூட்டமாக வெளியே செல்வது போன்றவையும் தொடர்கிறது.

இது பிற நோயாளிகளின் தொற்றை மேலும் தீவிரப்படுத்துவதுடன் அவர்களின் உடல்நிலையை மேலும் மோசமடைய செய்யவும் வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் கோவிட் கேர் சென்டர்களில் வழிகாட்டவோ, கண்காணிக்கவோ போதிய அலுவலர்கள் இல்லை, இதனை ஒழுங்குபடுத்தவும் பாதுகாப்பு அளிக்கவும் வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : district ,hospital ,Kumari ,corona patients , Kumari, corona patient, hospital
× RELATED குமரி மாவட்டம் முள்ளூர்துறையில் ரூ.5...