×

தூத்துக்குடி, சூரங்குடியில் 13 கிலோ கஞ்சா மூட்டைகள் பறிமுதல்: தந்தை, மகன் உள்பட 4 பேர் கைது

குளத்தூர்: தூத்துக்குடி, சூரங்குடி பகுதிகளில் கஞ்சா பதுக்கிவிற்ற தந்தை, மகன் உள்ளிட்ட 4 பேரை கைதுசெய்த போலீசார், 13 கிலோ கஞ்சா மூட்டைகளை பறிமுதல்செய்தனர். தூத்துக்குடி டேவிஸ்புரத்தில் கஞ்சா பதுக்கி விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை எஸ்ஐ ராஜபிரபு மற்றும் போலீசார் அங்கு ரோந்து சென்றனர். இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் வீட்டில் கஞ்சா பதுக்கி விற்றது உறுதியானது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சா பொட்டலங்கள் அடங்கிய மூட்டைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் அளித்த தகவலின் பேரில் சூரங்குடி எஸ்ஐ மாணிக்கராஜ் மற்றும் போலீசார் சூரங்குடி வேம்பார் கிழக்கு கடற்கரை சாலையில் நடந்துவந்துகொண்டிருந்த மூவரை சந்தேகத்தின் பேரில் மடக்கிப்பிடித்து விசாரித்தனர்.

இதில் அவர்கள், மேல் மாந்தை வடக்குத் தெருவை சேர்ந்த மாடசாமி (70), அவரது மகன் முனியசாமி (32), சூரங்குடி காலனி தெருவை சேர்ந்த கிருஷ்ணன் மகன் மகேஸ்வரன் (35) என்பதும் வீட்டில் கஞ்சா பொட்டலங்களை மூட்டைகளாக கட்டி பதுக்கிவைத்து  விற்றதும் அம்பலமானது. இதையடுத்து மூவரையும் கைதுசெய்த போலீசார், மேல்மாந்தை முனியசாமி வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 8 கிலோ கஞ்சா பொட்டல மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிந்த இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி, இதன் பின்னணியில் யார் உள்ளனர்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர  விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Thoothukudi ,Surangudi , Thoothukudi, Surangudi, cannabis bundles, confiscated
× RELATED தூத்துக்குடியில் மீனவரை கத்தியால் குத்தியவர் கைது