×

ஆந்திராவில் இருந்து உரிய ஆவணமின்றி ஆட்டோவில் கொண்டு வந்த ரூ.23 லட்சம் பறிமுதல்!: செங்குன்றம் போலீசார் நடவடிக்கை!!!

திருவள்ளூர்: செங்குன்றம் சோதனைச்சாவடியில் ஆந்திராவில் இருந்து ஆட்டோவில் கொண்டு வந்த 23 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. செங்குன்றத்தில் போலீசார் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை - திருவள்ளூர் மாவட்ட எல்லையில் செங்குன்றம் அமைந்துள்ளது. அந்த எல்லை பகுதியில் போலீசார் சோதனை சாவடி அமைத்து இ - பாஸ் இல்லாத வாகனங்களை திருப்பி அந்தந்த எல்லைக்குள் அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் சோழவரத்தில் இருந்து சென்னையை நோக்கி ஆட்டோ ஒன்று வந்து கொண்டிருந்தது.

அப்போது அந்த ஆட்டோவை செங்குன்றம் சோதனைச்சாவடியில் இருந்த போலீசார் மடக்கி சோதனை செய்த போது, ஓட்டுநர் முன்னுக்கு பின் முரணான தகவலை அளித்திருக்கிறார். இதனை அடுத்து அந்த ஆட்டோவில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டதில், பையில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது கண்டுடிக்கப்பட்டது. அவை சுமார் 23 லட்சம் ரூபாய் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பணம் கொண்டுவந்தவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தாம் ஆந்திர மாநிலம் கூடூரில் இருந்து வருவதாகவும், தம்முடைய பெயர் மகேஷ்பாபு, தாம் ஒரு நகைவியாபாரி, சென்னை சவுகார்பேட்டையில் நகை வாங்க செல்வதாக தெரிவித்திருக்கிறார். இருந்தபோதிலும் அவரிடம் உரிய ஆவணம் இல்லாததால் அப்பணத்தை பறிமுதல் செய்த போலீசார், அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து,

அவரை சொந்த ஜாமினில் விடுவித்த போலீசார், உரிய ஆவணங்களை கொண்டு வந்து வருமானவரித்துறை அலுவலகத்தில் சமர்ப்பித்து பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தியிருக்கிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதேபோன்று தமிழக - ஆந்திர எல்லையில் ஆந்திராவில் இருந்து காரில் கொண்டுவரப்பட்ட 5.2 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. முறையான ஆவணமின்றி கொண்டுவரப்படும் பணம் ஹவாலா பணமா? என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தற்போது செங்குன்றம் சோதனைச்சாவடியில் 23 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யபட்டிருக்கிற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : police action ,Andhra Pradesh ,Chenkunram , Rs 23 lakh , Andhra Pradesh , undocumented auto, Chenkunram police action
× RELATED ரேஷன் அரிசி, கோதுமை, பருப்பு, ஆயில் என...