மதுரையில் உணவக உரிமையாளர் புதிய முயற்சியில் கொரோனா விழிப்புணர்வு: பரோட்டா வாங்கினால் முககவசம்...!பிரியாணி வாங்கினால் சானிடைசர் இலவசம்!!!

மதுரை:  மதுரையில் கொரோனா விழிப்புணர்வை தூண்டும் வகையில் உணவக உரிமையாளர் ஒருவர் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மதுரையில் கொரோனா தொற்றானது நாளுக்கு நாள் புதிய உச்சம் பெற்று வருகிறது. அதாவது இதுவரை 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவர்களும், அரசு அதிகாரிகளும் தினந்தோறும் திணறி வருகின்றனர். கொரோனா பரவலுக்கு முக்கிய காரணம், பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததே ஆகும்.

இதனால், கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மதுரை மாவட்டம் ஆரப்பாளையத்தில் செயல்பட்டு வரும் 50 ஆண்டுகள் பழமையான சுப்பு கடை உணவக உரிமையாளர் புதிய முயற்சியை கையாண்டு வருகிறார். இந்த கடையில் கிரில் சிக்கன் மற்றும் பிரியாணி வாங்குபவர்களுக்கு கிருமிநாசினி மற்றும் முககவசங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும், 2 பரோட்டா வாங்கினால் ஒரு முககவசம்  இலவசமாக வழங்கப்படுகிறது. முககவசங்கள் மற்றும் கிருமிநாசினிகள் இலவசமாக வழங்கப்படும் நிலையில், உணவுகளின் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, கடை வாசலில் வைத்து வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக கபசுரக் குடிநீரும் வழங்கப்படுகிறது. காட்டுத்தீயாய் பரவும் கொரோனாவை கட்டுப்படுத்தும் சுப்பு கடை உரிமையாளர் முயற்சி வாடிக்கையாளர்களிடம் மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.

Related Stories: