×

மீஞ்சூரில் 2 ஆண்டுகளாக கிடப்பில் ரயில்வே மேம்பால பணிகள்: அதிகாரிகள் அலட்சியம்

பொன்னேரி: மீஞ்சூர் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக ரயில்வே மேம்பாலப் பணிகள் கிடப்பில் உள்ளன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இப்பணிகளை விரைவில் முடிக்க வலியுறுத்துகின்றனர். மீஞ்சூரில் இருந்து காட்டுர் வழியாக பழவேற்காடு வரை செல்லும் முக்கிய சாலை உள்ளது. மீஞ்சூரை சுற்றியுள்ள நெய்தவாயல், வாயலூர், காட்டூர். கல்பாக்கம் உள்பட 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த சாலையை பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே இருப்பு பாதையை கடக்கும் வகையில் கேட் அமைந்துள்ளது.

இந்த ரயில்வே கேட் மூடப்பட்டால் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி, மருத்துவமனை மற்றும் வேலைக்கு செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும் கேட் திறப்பதில் காலதாமதத்தால் பல்வேறு உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து, இங்கு ரயில்வே மேம்பாலம் கட்ட மக்கள் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ரயில்வே மற்றும் தமிழக நெடுஞ்சாலை துறை சார்பில் பலகோடி மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலப் பணிகள் துவங்கின. முதல் கட்டமாக, மேம்பாலத் தூண்களை ரயில்வே நிர்வாகம் அமைத்தது. எனினும், இன்றுவரை ரயில்வே மேம்பாலத்துக்கான நிலங்களை கையகப்படுத்தவோ, அதற்கான இழப்பீடு வழங்குவதிலோ தமிழக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

இதனால் மீஞ்சூரில் கடந்த 2 ஆண்டுகளாக ரயில்வே மேம்பாலப் பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, மீண்டும் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.  இதுகுறித்து ரயில்வே மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், பாலப் பணிகளை முடிப்பதில் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே, இந்த ரயில்வே மேம்பால பணிகளை உடனடியாக துவக்கி, அதற்கான நிலங்களை கையகப்படுத்தி, சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கி பணிகளை முடிக்க மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Minsur , Minsur, Railway Overpass
× RELATED மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய ஆலோசனை கூட்டம்