×

அதிமுக பெண் நிர்வாகியிடம் 1.5 கோடி மோசடி: முன்னாள் எம்எல்ஏ மீது எஸ்பியிடம் பரபரப்பு புகார்

செங்கல்பட்டு:  , திருப்போரூர் அடுத்த மடையத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் திரிபுரசுந்தரி. அதிமுக ஒன்றிய இணை செயலாளர். இவர் செங்கல்பட்டு எஸ்பி கண்ணனிடம் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது. திருப்போரூர் அடுத்த மடையத்தூர் பகுதியில் நான் வசிக்கிறேன். கடந்த 20 ஆண்டுகளாக, திருப்போரூர் ஒன்றிய அதிமுக இணை செயலாளராக பதவி வகித்து வருகிறேன். எனது கணவர் பஞ்சாட்சரம். அதிமுக பிரமுகர். எங்களுக்கு தினேஷ், ரத்திஷ், லோகேஷ் ஆகிய மகன்கள் உள்ளனர். முன்னாள் திருப்போரூர் எம்எல்ஏ தண்டரை மனோகரனுக்கும், எனது கணவருக்கும் இடையே கடந்த 1992ம் ஆண்டு முதல் நெருங்கிய பழக்கம் இருந்தது.

அதன் அடிப்படையில், எனது கணவரும்  தண்டரை மனோகரன் மற்றும் தண்டலத்தை  சேர்ந்த தர்மலிங்கம் ஆகியோர் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்தனர். மூவரும் தங்களது பங்குக்கு பணம் கொடுத்து மயிலம் என்ற கிராமத்தில் சுமார் 4 ஏக்கர் நிலத்தை வாங்கி விற்றனர். அதில் 3 பேருக்கும் கிடைத்த 30 லட்சத்தை வைத்து, கடந்த 2004ம் ஆண்டு காட்டூர் கிராமத்தில் சுமார் 8 ஏக்கர் நிலத்தை மனோகரனின் மனைவி மீனாட்சி பெயரில் மூவரும் சேர்ந்து கிரயம் பெற்றனர். ஆனால் மனோகரன், தனது மனைவியின் பெயரில் உள்ள நிலத்தில், சுமார் இரண்டரை ஏக்கர் நிலத்தை, கடந்த 2009ம் ஆண்டு வேறு ஒருவருக்கு ₹50 லட்சத்துக்கு விற்று விட்டார்.எங்களது பங்கு தொகை 15 லட்சத்தை தரும்படி கேட்டோம். அவர் தரவில்லை.

2014ம் ஆண்டு, மேலும் 3 ஏக்கர் நிலத்தை, தனது பங்குதாரர்களில் ஒருவரான எனது கணவரிடம் ஆலோசிக்காமல், தன்னிச்சையாக வேறு ஒருவருக்கு கிரயம் செய்து விட்டார். மொத்தம் ஐந்தரை ஏக்கர் நிலத்தை விற்று, அதில் கிடைத்த தொகையில், எனது கணவரின் பங்கு 2 கோடி. அதை அவர் தரவில்லை. மேலும், எனது கணவருடன் ஆலோசனை நடத்தாமல், அவரது பினாமி பெயருக்கு மாற்றம் செய்து கொண்டார்.  இதையடுத்து அவரிடம் பலமுறை கேட்டபிறகு 50 லட்சத்தை 2014ம் ஆண்டு கொடுத்தார்.  மீதி ₹1.5 கோடியை தரவில்லை. இதனால் மன அழுத்தம் மற்றும் மன உளைச்சலால் எனது கணவர் இறந்துவிட்டார். அவரது இறப்புக்கு பின், நானும் எனது மகன்களும் பலமுறை மனோகரனை சந்தித்து, பணத்தை கேட்டோம். கடந்த 2 நாட்களுக்கு முன் கேட்டபோது, எங்களை தகாத வார்த்தையால் பேசி விரட்டி அனுப்பினார்.

இந்நிலையில், இன்று (நேற்று) காலை நானும் எனது மகன்கள் லோகேஷ், ரதீஷ் ஆகியோர் சென்று கேட்டோம். அப்போது, பொது இடம் என்றும் பார்க்கமல் அசிங்கமாக பேசி திட்டினார். மேலும், பணத்தை தர முடியாது. மீண்டும் தொல்லை கொடுத்தால், உங்களை கண்டம் துண்டமாக வெட்டி அடையாளம் இல்லாமல் செய்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தார். எனவே, எனது கணவருக்கு சேர வேண்டிய 1.5 கோடியை தராமல் ஏமாற்றி வரும் அதிமுக முன்னாள் எம்எல்ஏ மனோகரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் குடும்பத்தினருக்கு உயிர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ஆளும்கட்சி முன்னாள் எம்எல்ஏ மீது நிலமோசடி புகாரை அதிமுகவை சேர்ந்த பெண் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புகார் கூறப்பட்ட முன்னாள் எம்எல்ஏ தண்டரை மனோகரன், முன்னாள் மத்திய மாவட்ட செயலாளர், முன்னாள் திருப்போரூர் ஒன்றிய செயலாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக முன்னாள் எம்எல்ஏ மறுப்பு
முன்னாள் எம்எல்ஏ தண்டரை மனோகரன் நேற்று, திருப்போரூரில் செய்தியாளர்களை சந்தித்து கூறியது: திரிபுரசுந்தரி என்பவர் என் மீது கொடுத்த புகாரில் எவ்வித உண்மைத்தன்மையும் கிடையாது. இது அப்பட்டமான பொய். திரிபுரசுந்தரியின் கணவர் பஞ்சாட்சரத்திற்கு கொடுக்க வேண்டிய பணம் பெரும்பாலும் கொடுத்தாகி விட்டது. புகாரில் கூறியவாறு அவ்வளவு பணம் கொடுக்க வேண்டியதில்லை. மேலும் அந்த குறிப்பிட்ட இடம் இன்னும் விற்கவில்லை. விற்கும்போது அவர்களுக்கு எவ்வளவு சேர வேண்டியதோ அதை கொடுக்கப் போகிறேன்.

நேற்று காலை திரிபுரசுந்தரி என் அலுவலகத்திற்கு வந்து பணம் குறித்து கேட்டபோது, உரிய விளக்கமளித்தேன். அதை ஏற்றுக் கொண்டுதான் சென்றார். என் பெயரை கெடுப்பதற்காகவே அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகளே இப்படி ஒரு புகார் கொடுக்க வைத்து கட்சி தலைமைக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.இதுப்பற்றி அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளது. இது முற்றிலும் பொய்யான புகார் என்றார்.

Tags : MLA ,woman executive ,AIADMK ,SP , AIADMK female executive, fraud, former MLA, SP
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...