×

பெங்களூரு, ஐதராபாத், புனே நகரங்களில் தொற்றின் வேகம் அதிகரிப்பு: சென்னை, மும்பை, டெல்லியில் கொரோனா குறைகிறது

கேரளாவில் 2 இடங்களில் சமூக பரவல் தொடங்கியுள்ளது என அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் தகவல்.

சென்னை: கொரோனா தொற்று மிக வேகமாக பரவும் நகரங்களாக பெங்களூரு, ஐதராபாத், புனே நகரங்கள் டெல்லி, மும்பை, சென்னையை பின்னுக்குத் தள்ளியுள்ளன.
நாடு முழுவதும் கொரோனா தொற்று மிக வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிடக் கூடாது என்பதில் அனைத்து மாநில அரசுகளும் கவனமாக உள்ளன. கொரோனா தொற்று அதிகமாக பரவியுள்ள மாநகரங்களில் டெல்லி, மும்பை, சென்னை முதல் 3 இடங்களில் உள்ளன. இந்நிலையில், தொடர் ஊரடங்கு காரணமாகவும், இந்த மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகளாலும் கொரோனா தொற்று இந்த மாநகரங்களில் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளன.

அதே நேரத்தில் இந்த மாநிலங்களின் மற்ற பகுதிகளில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளது பெரும் சவாலாக உள்ளது.  தமிழகத்தில் சென்னையில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்தாலும் மாவட்டங்களில் கொரோனா தொற்று வேகமெடுத்துள்ளது. இந்நிலையில், கடந்த 4 வாரங்களாக பெங்களூரு, ஐதராபாத், புனே ஆகிய நகரங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை வேகமெடுத்துள்ளது.  பெங்களூரில் கடந்த 4 வாரங்களில் கொரோனா தொற்று சராசரியாக 12.9 சதவீதம் அதிகரித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையும் 8.9 சதவீதம் உயர்ந்துள்ளது. இதே காலக்கட்டத்தில் ஐதராபாத்தில் 7.8 சதவீதமும், புனேயில் 4.5 சதவீதமும் தொற்று  அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்று எண்ணிக்கை தேசிய சராசரியைவிட கணிசமாக குறைந்த நிலையிலும் உயிரிழப்பு எண்ணிக்கையில் அகமதாபாத் முதலிடத்தில் உள்ளது. கடந்த 4 வாரங்களில் அகமதாபாத்தில் ஒவ்வொரு 10 லட்சம் மக்கள் தொகையிலும் 2,866 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு 10 லட்சத்திலும் 193 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.  இதற்கு அடுத்தபடியாக மும்பையில் ஒவ்வொரு 10 லட்சத்திலும் 7583 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 345 பேர் உயிரிழந்துள்ளனர். கொல்கொத்தாவில் ஒவ்வொரு 10 லட்சத்திற்கும் 1855 பேர் பாதிக்கப்பட்டு 64 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் ஒவ்வொரு 10 லட்சம் பேரில் 8595 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் இறப்பு 140 மட்டுமே.

 மும்பையை பொறுத்தவரை கொரோனா தொற்றின் வேகம் கட்டுக்குள் வந்துள்ளது. தமிழ் மக்கள் வாழும் தாராவியில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து தினமும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஒற்றைப்படை எண்ணுக்கு வந்துள்ளது.   அதே நேரத்தில் மகாராஷ்டிர மாநிலத்தின் முக்கிய நகரங்களான புனே, தானே, கல்யாண், நவி மும்பை ஆகிய இடங்களில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நகரங்களில் தலா 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மும்பையில் கொரோனா தொற்று குறைந்தாலும் மகாராஷ்டிர மாநிலத்தின் இதன் தீவிரம்  அதிகரித்துள்ளது.

 இதற்கிடையே கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகேயுள்ள கடற்கரை பகுதிகளான பூந்துரா, புளிவிலா ஆகிய இடங்களில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிட்டதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு பகுதிகளிலும் தலா 150 பேருக்கும் மேல் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Corona ,Delhi ,Hyderabad ,Pune ,Bangalore ,Mumbai ,Chennai , Bangalore, Hyderabad, Pune, Chennai, Mumbai, Delhi, Corona
× RELATED தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிஸ்கட் தொழிற்சாலையில் தீ விபத்து..!!