×

அமெரிக்காவை போல கறுப்பின வாலிபர் கழுத்தை நெரித்த இங்கிலாந்து போலீஸ் சஸ்பெண்ட்: உடனடி நடவடிக்கை பாய்ந்தது

லண்டன்: அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட்டைப் போல இங்கிலாந்தில் கறுப்பின வாலிபரின் கழுத்தை முழங்காலிட்டு நெரித்த ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் அதிகாரி உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் நகரில் கடந்த மே மாதம் கடையில் கள்ளநோட்டு கொடுத்ததாக ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பினத்தவரை போலீசார் கைது செய்ய முயற்சித்தனர்.  அப்போது ஒரு போலீஸ் அதிகாரி ஜார்ஜின் கழுத்தில் தனது ழுழங்காலால் அழுத்தி அவரை எழுந்திருக்க முடியாமல் செய்தார். குரல்வளை நெரிக்கப்பட்டதில் ஜார்ஜ் அந்த இடத்திலேயே மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல நாடுகளில் போராட்டம் வெடித்தது. இந்நிலையில், ஜார்ஜ் பிளாய்டு கைது சம்பவம் போன்றே, இங்கிலாந்தில் மற்றொரு சம்பவம் அரங்கேறியது. லண்டன் தெற்கு பகுதியில் இஸ்லிங்டன் நகரி சாலைப்பகுதியில் சிலர் மோதலில் ஈடுபடுவதாக கடந்த வியாழக்கிழமை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு விரைந்த ஸ்கார்ட்லாந்து போலீசார், சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்தனர். அப்போது போலீஸ் பிடியில் இருந்து கறுப்பின வாலிபர் ஒருவர் தப்பிக்க முயன்றதால், அந்த நபரை கைவிலங்கிட்ட போலீசார் வலுக்கட்டாயமாக தரையில் தள்ளி முழங்காலிட்டு கழுத்தை நெரித்தனர். மூச்சு விட முடியாமல் திணறிய அந்த நபர் ‘என் கழுத்தை விடுங்கள்’ என கத்தி கூச்சலிட்டார்.

இந்த சம்பவத்தை அருகில் இருந்தவர்களில் சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். இதனால் இந்த விவகாரம் இங்கிலாந்தில் பூதாகாரமானது. அமெரிக்காவின் ஜார்ஜ் பிளாய்ட் மரணத்தை கண்டித்து இங்கிலாந்து முழுவதும் போராட்டங்கள் வெடித்த நிலையில், தலைநகர் லண்டனிலேயே அதே சம்பவம் நடந்து மக்களை கொதிப்படைய செய்தது. இதனால், கைது நடவடிக்கையின் போது விதிமுறைகளுக்கு மாறாக செயல்பட்டு சந்தேக நபரின் கழுத்தை முழங்காலால் நெரித்த போலீஸ் அதிகாரி உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு இங்கிலாந்து போலீஸ் துறையும் வருத்தம் தெரிவித்துள்ளது.


Tags : teenager ,UK ,US , USA, Black Youth, UK Police, Suspended
× RELATED பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி: டிரைவருக்கு 2 ஆண்டு சிறை