×

பொதுமக்களின் நலனுக்காக தி.மு.க. நடத்தும் போராட்டம் நீதிமன்ற அவமதிப்பு ஆகாது: அமைச்சர் பாண்டியராஜனுக்கு திமுக பதில்

சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி வெளியிட்ட அறிக்கை: மின்கட்டணத்தை குறைக்க கோரி கருப்புக் கொடி போராட்டம்  நடத்துவது நீதிமன்ற அவமதிப்பு என அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். சட்டத்தையும்,  நீதிமன்றத்தையும் எந்நேரத்திலும் -எக்காலத்திலும் மதித்து நடக்கும் இயக்கம் திமுக என்பதையும்,  தி.மு.க. மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதையும் அறியாத அமைச்சர் பாண்டியராஜன் நீதிமன்ற அவமதிப்பு என்ற பூச்சாண்டி காட்டியிருக்கிறார்.  

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக மாவட்டச் செயலாளர், எம்எல்ஏ, எம்பிக்கள் கூட்டத்தில் ‘‘மத்திய பிரதேசம், கேரளம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களே கொரோனா கால மின்கட்டணச்  சலுகைகளை அறிவித்துள்ள நிலையில், அதிமுக அரசு மட்டும் முறையாகவே கணக்கிட்டுள்ளோம் என்று உயர் நீதிமன்றத்தின் முன்பு வாதாடிவிட்டு, இப்போது அதையே விளக்கமாக ‘செய்திக்குறிப்பு’ ஒன்றைக் கொடுத்திருப்பது பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பற்றி கவலை கொள்ளாத போக்காகும்.
முந்தைய மாதத்திற்கு செலுத்திய பில் கட்டணத்தை குறைப்பதற்கு பதில் அந்தத் தொகைக்குரிய யூனிட்டுகளை கழிக்க வலியுறுத்தியும்,  அப்படிக் குறைக்கப்பட்ட மின்கட்டணத்தை எளிய மாதத் தவணைகளில் செலுத்த மக்களுக்கு அனுமதி வழங்கக் கோரியும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் என்பதை ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறார் அமைச்சர் பாண்டியராஜன். இது எப்படி நீதிமன்ற அவதிப்பு ஆகும்.

மக்களுக்காக மக்கள் நலனுக்காக மாநில அரசிடம் கோரிக்கை வைத்து அறவழி ஆர்ப்பாட்டத்தை நடத்துவது எப்படி நீதிமன்ற அவமதிப்பு ஆகும். அதோடு, அதிமுக ஆட்சி காலத்தில், ‘10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு ரத்து’  போன்ற மக்களுக்கான நன்மைகளை செயல்படுத்திட, திமுக நீதிமன்றத்தை நாடி, அதன் மூலம் எச்சரிக்கப்பட்டு, அதன் பின்பு ஆளும் அதிமுக அரசு செயல்படுத்தியதிலிருந்தே, நீதிமன்றத்தை திமுக எப்படி மதிக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். அத்துடன்,  அமைச்சர் பாண்டியராஜனின் கட்சியின் தலைவி முதல் அக்கட்சியினரின் ஊழல்களையும் - தில்லுமுல்லுகளையும், திமுக நீதிமன்றத்தின் மூலம் அம்பலப்படுத்தியுள்ளது.

இதனையெல்லாம் அறிந்து கொண்டு அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி அளித்திட வேண்டுமென்பதோடு, மக்களுக்காக - மக்கள் நலனுக்காக மாநில அரசிடம் கோரிக்கை வைத்து அறவழி ஆர்ப்பாட்டத்தை நடத்துவது எந்த வகையிலும் நீதிமன்ற அவதிப்பு ஆகாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கறுப்பர் கூட்டத்துக்கு திமுக கண்டனம்
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி அண்ணா அறிவாலயத்தில் நேற்று  நிருபர்களிடம் கூறியதாவது:  சமீபகாலமாக திமுக மீதும் தலைவர் ஸ்டாலின் மீதும் தவறான பிரசாரங்களைச் செய்வதற்குத் திட்டமிட்டு ஒரு கூட்டம் செயல்பட்டு வருகிறது. மக்கள் மத்தியில் திமுக தலைவருக்குப் பெருகி வரும் ஆதரவைப் பொறுக்காதவர்கள், தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் திட்டமிட்டு இவ்வாறு விஷமத்தனமான பிரசாரங்களைச் செய்து வருகின்றனர்.

 அதில் ஒன்றாக நேற்றைய தினம், திமுக தலைவர் மீது, அவர் பெயரில் போலியான டிவிட்டர் கணக்கும் தொடங்கப்பட்டுள்ளது. அதில் முருகனை இழிவுபடுத்தி பேசியுள்ள கருப்பர் கூட்டத்துக்கு திமுக ஆதரவு தெரிவிக்கும் என்று ஒரு போலியான தகவலை ஸ்டாலின் பெயரில் பதிவிட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. கந்த சஷ்டி கவசம் குறித்து, கறுப்பர் கூட்டம் தெரிவித்த கருத்தை திமுக வன்மையாக கண்டிக்கிறது.


Tags : DMK ,public ,Minister Pandiyarajan ,Pandiyarajan: Struggle ,court ,Minister , Public, DMK, Struggle, Mysore Pandiyarajan, DMK
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...