கல்வி நிறுவனங்களின் வாகனங்களுக்கு சாலை வரி, அபராதம் எனஅரசு நிர்ப்பந்திக்க கூடாது: ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: கோவை அண்ணா பல்கலைக்கழக இணைப்பு பெற்ற கல்லூரி நிர்வாகங்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அனைத்து கல்லூரி வாகனங்களின் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வாகனங்கள் இயக்கம் நிறுத்தப்பட்டது குறித்து தகவல் தெரிவிக்கும்படி, வட்டார போக்குவரத்து அதிகாரிகள், வாகன போக்குவரத்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் அனுப்பியுள்ளனர். சாலை வரி செலுத்தச் சென்ற கல்வி நிறுவன வாகனங்களுக்கு நூறு சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் சாலையில் இயக்கப்படாத வாகனங்களுக்கான வரி வசூலை நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஊரடங்கு காலத்தில் சாலை வரி செலுத்துவதில் இருந்து தங்களுக்கு உரிமை உள்ளது. வரி செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் மிரட்டி வருகிறார்கள். எனவே, எங்கள் சங்க உறுப்பினர்களுக்கு சாலை வரி விதிக்க கூடாது என்று உத்தரவிட வேண்டும். அதேபோல, சாலை வரி செலுத்தும்படி நிர்ப்பந்திக்க கூடாது என்றும் உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு வரும் 22ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.மேலும், மனுதாரர் சங்க உறுப்பினர்களிடம் வரி மற்றும் அபராதம் செலுத்தும்படி கூறி கடும் நடவடிக்கை எடுக்க கூடாது என்றும் அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories:

More