×

கொரோனா தடுப்பு பணிக்காக 400 கோடி செலவு சென்னையில் தளர்வுகளுக்கு தயாராக இருக்கிறோம்: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி

சென்னை: மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப, சென்னையில் தளர்வுகளுக்கு தயாராக இருப்பதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கொரோனா பரவலை தடுக்க சென்னை மாநகராட்சி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நேற்று இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார். இதில் சுகாதாத்துறை இணை ஆணையர் மதுசுதன் ரெட்டி, கல்வித்துறை இணை ஆணையர் சங்கர்லால் குமாவத், தலைமை பொறியாளர் மகேசன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் செய்தியாளர்களிடம் கூறியதாவது : சென்னையில் பரிசோதனைகளை அதிகப்படுத்தியபோது நல்ல முன்னேற்றங்கள் கிடைத்துள்ளது. இன்றைய தேதியில் நாள் ஒன்றுக்கு சென்னையில் 12500 முதல் 13000 பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை 5 லட்சம் பி.சி.ஆர். பரிசோதனை சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இந்தியாவிலேயே 5 லட்சம் பரிசோதனைகளை கடந்த முதல் மாநகராட்சி சென்னைதான். 18,000 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு 11 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

இந்த முகாம்கள் மூலம் சுமார் 60 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 8.5 லட்சம் பேர் இதுவரை வீட்டு கண்காணிப்பில் இருந்துள்ளனர். சென்னை மாநகராட்சியில் களப்பணியில் மட்டும் 350 மருத்துவர்கள் உள்ளனர். சென்னையில் பரிசோதனைகளுக்கு மட்டும் 200 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.  களப்பணியாளர்களுக்கு உணவு அளிக்க 30 கோடி, எம்.டி.சி.பேருந்துகளுக்கு 14 கோடி என்று சுமார் 400 கோடி ரூபாய் சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக செலவிடப்பட்டுள்ளது சென்னை மாநகராட்சியின் தொடர் நடவடிக்கையால் தொற்று சதவீதம் இந்த மாத இறுதியில் 8 சதவீதமாக குறையும்.

சென்னையில் தொற்று எண்ணிக்கை இரு  மடங்காக உயர 47 நாட்கள் ஆகிறது. சென்னையில் தொற்று அதிகம் உள்ள மண்டலங்களில் தொற்று இரு மடங்காக உயர 90 நாட்கள் கூட ஆகிறது. இப்போதும் தளர்வுகள் உள்ளது, பொருளாதாரம் வளர்ச்சியடையவும் மக்களின் வாழ்வாதாரம் மேம்படவும் தளர்வுகள் தேவை. எனவே சென்னையில் தளர்வுகளுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.

Tags : Prakash. ,Prakash ,Chennai , Corona, Chennai, Corporation Commissioner Prakash
× RELATED தினமும் காலையில் எழுந்தவுடன் 100...