×

ஓராண்டில் தங்க ராணி சொப்னா 200 கிலோ தங்கம் கடத்தல்: பரபரப்பு தகவல்கள் அம்பலம்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில்  உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் மூலம், சொப்னா தலைமையிலான கும்பல் கடந்த 13  மாதங்களில் 200 கிலோ தங்கம் கடத்தியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தங்கம் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள சரித்குமாரும், சந்தீப் நாயரும் பல ஆண்டுகால நண்பர்கள்.  சரித்குமார் மூலம் சந்தீப்நாயருக்கு சொப்னாவுடன் தொடர்பு  ஏற்பட்டது. 2014ம் ஆண்டு முதலே சந்தீப் நாயர் தங்க கடத்தலில்  ஈடுபட்டுள்ளார். சொப்னாவுடன் ஏற்பட்ட பழக்கத்தால், தூதரக பார்சல் வழியாக தங்கம் கடத்தலாம்  என்ற ஐடியா சந்தீப் நாயருக்கு உதித்தது. 2019 மே  மாதம் இதற்கான திட்டத்தை தீட்டிய அவர்  ரமீஸ் மற்றும் ஜலால் முகமதின் உதவியை நாடியுள்ளார்.

இந்த வழக்கில் 3வது நபரான துபாயில் உள்ள பைசல் பரீதுக்கும், ஜலால் முகமதுவுக்கும் ஏற்கனவே  தொடர்பு உண்டு. பைசல் பரீத் துபாயிலிருந்து தங்கத்தை வாங்கி தூதரக பார்சலில் அனுப்பி வந்துள்ளார். இதற்கான  பணத்தை சந்தீப் நாயர் தலைமையிலான கும்பல் திரட்டி, ஹவாலா  கும்பல் வழியாக பைசல் பரீத்துக்கு அனுப்பி வைத்து வந்தனர். சரித்குமார் தூதரக பிஆர்ஓ என்பதால் தங்கம் வரும்  பார்சலை விமான நிலையத்துக்கு நேரடியாக சென்று வாங்கி கொள்வார். பார்சல்  அனுப்புவதற்கான அங்கீகார கடிதத்தை சரித்குமார் போலியாக தயாரித்து பைசல்  பரீத்துக்கு அனுப்பி வைப்பார். அதில் ஒரு கடிதத்தை சரித்குமார்  திருவனந்தபுரத்தில் உள்ள சுங்க இலாகா அதிகாரிகளிடம் ெகாடுத்து வந்துள்ளார்.  

தங்களது திட்டத்தை வெற்றிகரமாக  செயல்படுத்த முடியுமா என சோதிக்க, கடந்த ஆண்டு மே மாதம் தூதரக பார்சலில்  எமர்ஜென்ஸி விளக்கு, மிட்டாய்கள், பேரீச்சம்பழம் மற்றும் உணவுப்பொருட்களை  அனுப்பி வைத்துள்ளனர். அதை போலி கடிதம்  கொடுத்து சரித்குமார் பெற்றுக்கொண்டார். இது வெற்றிபெற்றதை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் முதல்  இவர்கள் தூதரக பார்சலில் தங்கத்தை கடத்த தொடங்கினர். முதலில் 3.5  கிலோவில் தொடங்கி, 5, 7, 26 என படிப்படியாக கடத்தலை அதிகரித்தனர்.  கடைசியாக 30 கிலோ அனுப்பிய போது சிக்கிக் கொண்டனர். இவர்கள் இதுவரை 200 கிலோ தங்கத்தை (பிடிபட்ட 30 கிலோவை தவிர்த்து) கடத்தி  உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் சொப்னாவுக்கு பல லட்சம் கமிஷனாக வழங்கப்பட்டுள்ளது. கடைசியாக  வந்த பார்சலுக்காக மட்டும் அவருக்கு 10 லட்சம் ஒப்பந்தம் ெசய்யப்பட்டதாக  தெரிகிறது. இந்த கடத்தல்  விவகாரத்தில் தீவிரவாத கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என தகவல்  கிடைத்ததால் என்ஐஏ களம் இறங்கியது. என்ஐஏ கேட்டதையடுத்து கடந்த 5 ஆண்டுகளில் கேரளாவில் நடந்த தங்கம் கடத்தல் தொடர்பான  விபரங்களை கேரள போலீசார்
என்ஐஏ வசம் ஒப்படைத்தனர். இதன்படி கடந்த 5 ஆண்டுகளில்  178 கிலோ தங்கம் பிடிபட்டுள்ளது. இவையனைத்தும் விமான நிலையங்களுக்கு  வெளியே பிடிபட்டவையாகும்.

விமான நிலையங்களில் பிடிபட்ட தங்கம் இதைவிட பல மடங்கு இருக்கும். குறிப்பாக வடக்கு கேரளத்தில் உள்ள 3  கும்பல்கள்தான் இந்த கடத்தலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக, கேரள போலீஸ்  தெரிவித்துள்ளது. இதுகுறித்து என்ஐஏவும் விசாரணையை தொடங்கி உள்ளது. பைசல் பரீத்துக்கு இன்டர்போல் லுக்-அவுட் நோட்டீஸ்: துபாயில் பதுங்கியிருக்கும் பைசல் பரீதுக்கு  இன்டர்போல் லுக்-அவுட் நோட்டீஸ் வழங்கி உள்ளது.  அவருடைய பாஸ்போர்ட்டையும் தூதரக அதிகாரிகள் முடக்கியுள்ளனர். அவரை கைது செய்வதற்காக என்ஐஏ  அதிகாரிகள் விரைவில் துபாய் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

திருவனந்தபுரத்தில் சொப்னா: சொப்னா மற்றும் சந்தீப் நாயரிடம் கடந்த சில நாட்களாக என்ஐஏ  அதிகாரிகள் கொச்சியில் ஒரு ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி  வந்தனர்.   நேற்று இருவரையும் என்ஐஏ  அதிகாரிகள் தனித்தனி கார்களில் திருவனந்தபுரத்திற்கு அழைத்து வந்தனர். இருவரையும் பல்வேறு இடங்களுக்கு  அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களை திருவனந்தபுரம் போலீஸ் கிளப்பிற்கு கொண்டுசென்று இரவு நெடுநேரம் விசாரணை நடத்தினர். விசாரணையில் கம்யூட்டர் ஹார்டு டிஸ்குகள் ேலப்டாப்கள் மற்றும் செல்பாேன்கள் கைப்பற்றப்பட்டன. இதில் முக்கிய ஆதாரங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவசங்கருக்கு பிடி இறுகுகிறது: சொப்னா கும்பலுடன் பல்வேறு இடங்களில் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் ரகசிய ஆலோசனை நடத்தியது   தொடர்பான முக்கிய ஆதாரங்களையும் என்ஐஏ திரட்டியுள்ளது. திருவனந்தபுரத்தில்   கேரள சுற்றுலாத்துறைக்கு சொந்தமான 5 நட்சத்திர ஓட்டலில்   சிவசங்கர் அடிக்கடி வந்து தங்குவார். தொடர்ந்து சொப்னாவும் அங்கு வருவாராம்.   இந்த ஓட்டலில் சிவசங்கர் வந்து சென்ற விபரம் குறித்து   கண்காணிப்பு ேகமராவில் பதிவான காட்சிகளை என்ஐஏ சேகரித்து வருகிறது.

ேநற்று சரித்குமாரிடம் என்ஐஏ நடத்திய விசாரணையில், சிவசங்கருடன் தனக்கு நெருங்கிய பழக்கம் உண்டு. என்றும் கடத்தல் குறித்து அவருக்கு நன்கு தெரியும் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து எந்த நேரத்திலும் சிவசங்கரை என்ஐஏ விசாரிக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

தங்கத்தை திருப்பி அனுப்ப முயற்சி
ஜூன் 30ம் தேதி தங்கம் அடங்கிய பார்சல் திருவனந்தபுரம் வந்தது.  நிச்சயம் பிடிபடுவோம் என்று கருதிய சொப்னா பார்சலை துபாய்க்கு திருப்பி அனுப்ப முயற்சித்தார். இதற்காக துணை தூதருக்கு இமெயில் மூலம் தகவல் அனுப்பினார். இதையடுத்து பார்சலை திருப்பி அனுப்ப கோரி துணை தூதர் சுங்க இலாகா துணை கமிஷனருக்கு கடிதம் அனுப்பினார். இது ெதாடர்பாக சொப்னா அனுப்பிய இ ெமயில் விபரங்கள் என்ஐஏவுக்கு கிடைத்துள்ளது.

அமித்ஷா அவசர ஆலோசனை
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று அதிகாரிகளுடன் டெல்லியில் அவசர ஆலோசனை நடத்தினார். இதில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரனும் பங்கேற்றார். திருவனந்தபுரம் தங்க கடத்தல் குறித்து இந்த கூட்டத்தில் அமித்ஷா விவரங்களை கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

பூர்ணாவை பயன்படுத்தி  தங்கம் கடத்த முயற்சி
தங்கம் கடத்தல் வழக்கில் மலப்புரத்தை ேசர்ந்த அம்ஜத் அலி என்பவரும் பிடிபட்டுள்ளார். இவர் நடிகர், நடிகைகளை பயன்படுத்தி தங்கம் கடத்த திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது. நடிகை பூர்ணாவை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறிக்க முயன்றது. அந்த கும்பலுடன் அம்ஜத் அலிக்கு தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கொச்சி குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், தங்கம் கடத்தல் கும்பலுக்கும் பூர்ணாவை மிரட்டிய கும்பலுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. ெவளி நாடுகளுக்கு கலை நிகழ்ச்சி நடத்த செல்லும் நட்சத்திரங்களை பயன்படுத்தி இவர்கள் தங்கம் கடத்த திட்டமிட்டதும் தெரிய வந்துள்ளது.

Tags : Sopna , One year, gold queen Sopna, gold smuggling
× RELATED ரகசிய வாக்குமூலத்தை வாபஸ் பெற கூறி...