×

பணி செய்யவிடாமல் அதிமுகவினர் இடையூறு தற்கொலை செய்யப்போவதாக ஊராட்சி தலைவி கதறல்: வலைதளங்களில் ஆடியோ வைரல்

நெய்வேலி: தனது பணிகளில் அதிமுகவினர் இடையூறு செய்வதாக ஊராட்சி மன்ற தலைவி வெளியிட்டுள்ள ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அவர் மாவட்ட ஆட்சியரிடம் புகாரும் அளித்துள்ளார். கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த பெரிய காப்பான்குளம் ஊராட்சியில் சின்னகாப்பான் குளம், வீரட்டிக்குப்பம், ஆதிதிராவிடர் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். ஊராட்சி தலைவர் தேர்தலில் தமிழ்ச்செல்வி போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவரது கணவர் அரங்கநாதன். இவர் பெரிய காப்பான்குளம் ஊராட்சி தி.மு.க செயலாளராக உள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன், வீரட்டிக்குப்பம் அரசு துவக்கப்பள்ளியில் சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணியை அதிமுக நிர்வாகிகள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய பொறியாளர் தடுத்து நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி வெளியிட்டுள்ள ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், ‘பெரிய காப்பான்குளம் ஊராட்சி மன்ற தலைவியாக நான் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு ஊரின் முக்கிய அதிமுக பிரமுகர்கள் அழுத்தம் காரணமாக பல்வேறு ஊராட்சி பணிகளுக்கு என்னை புறக்கணிக்கின்றனர். ஊராட்சி மன்ற தலைவிக்கு உரிய பாதுகாப்பு இல்லை.

அதிமுகவினர் அழுத்தம் காரணமாக எனக்கு பல்வேறு நெருக்கடிகள் வருகிறது. கையெழுத்து போடுவது மட்டும் உனது வேலை. மற்றவற்றை நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்று மிரட்டுகிறார்கள். இதில் கலெக்டர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நான் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன்’ என்று கதறி அழுகிறார். இந்த ஆடியோ வைரலாகி உள்ளது. இதனிடையே நேற்றுமுன்தினம் கடலூர் மாவட்ட கலெக்டரிடம் அவர் புகார் மனு அளித்துள்ளார்.

இதையடுத்து, கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வரும்படி ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி அழைப்பு விடுத்தார். அதன்படி நேற்று காலை ஆட்சியரை தமிழ்ச்செல்வி சந்தித்து விளக்கம் அளித்து இருந்தார். இதன்பின்பு, தொடர்ந்து பணிகளை செய்யுமாறு உத்தரவிட்டார்.

Tags : Panchayat leader ,suicide ,AIADMK , AIADMK, disruptive suicide. Panchayat leader. Websites, Audio Viral
× RELATED அதிமுக ஆட்சியிலும் கல்வராயன் மலையில்...