×

முன்னணி ஐடி நிறுவனமான ஹெச்.சி.எல் தலைவரானார் சிவ் நாடார் மகள் ரோஷிணி

புதுடெல்லி: ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைவராக இருந்த சிவ் நாடார் அந்த பொறுப்பில் இருந்து விலகிய பிறகு, அவரது மகள் ரோஷிணி நாடார் மல்ஹோத்ரா தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.   நாட்டின் முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனமாக ஹெச்.சி.எல் உள்ளது. இதன் நிறுவனர் சிவ் நாடார், தமிழகத்தை சேர்ந்தவர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மூலைப்பொழி கிராமம் அவரது சொந்த ஊர். இந்த நிறுவனத்தில் 1,50,287 ஊழியர்கள் உள்ளனர்.

 ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைவராக இருந்த சிவ் நாடார், 75 வயது பூர்த்தியானதால் அந்த பொறுப்பில் இருந்து நேற்று முன்தினம் விலகினார். இதை தொடர்ந்து, சிவ் நாடார் -கிரண் நாடார் தம்பதியின் ஒரே மகளான ரோஷிணி நாடார் மல்ஹோத்ரா தலைமை பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
 கடந்த 2009ல் ஹெச்சிஎல் கார்ப்பரேஷனில் செயல் இயக்குநராக சேர்ந்த இவர், 27 வயதிலேயே தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார். 2013ல் துணைத் தலைவரானார். தற்போது, நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள இவர், ஹெச்.சி.எல் கார்ப்பரேஷன் தலைமை செயல் அதிகாரியாகவும் பொறுப்பு வகிப்பார்.

பன்முக திறன் பெற்றவர்
* அமெரிக்காவின் கெலாக் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட்டில் எம்பிஏ பட்டம் பெற்றவர்.
* ஹெச்சிஎல் கார்ப்பரேஷனில் சேர்வதற்கு முன்பு ஸ்கை நியூஸ், சிஎன்என் ஆகிய செய்தி நிறுவனங்களில் செய்தி தயாரிப்பாளராக பணியாற்றியவர்.
* கர்நாடக சங்கீதம் கற்றவர்.
* பன்முக திறமை வாய்ந்த இவர், கடந்த 2010ல் ஹெச்சிஎல் ஹெல்த்கேர் துணை தலைவர் ஷிகார் மல்ஹோத்ராவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
* ஹுருண் வெளியிட்ட சமீபத்திய பட்டியலில், இந்தியாவின் பணக்கார பெண்ணான ரோஷிணி நாடார் சொத்து மதிப்பு 38,800 கோடி என குறிப்பிட்டுள்ளது.

Tags : Roshini ,HCL ,president ,Shiv Nadar , Roshini, daughter of leading IT company, HCL President Shiv Nadar
× RELATED நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவிக்கு HCL-ல் பணி..!!