×

மாரடைப்பால் இறந்தவர் சடலத்தை வழங்காமல் 10 நாளாக அலைக்கழிப்பு: மருத்துவமனையின் தவறை மறைப்பதற்கு போலி அறிக்கை தயாரித்த அதிகாரிகள்: உறவினர்கள் குற்றச்சாட்டு

பெரம்பூர்: அரசு பொது மருத்துவமனையில் மாரடைப்பால் இறந்தவர் சடலத்தை 10 நாட்களாக வழங்காதது குறித்து உறவினர்கள் கேள்வி எழுப்பியபோது, கொரோனாவால் இறந்ததாக அதிகாரிகள் போலி அறிக்கை தயார் செய்து, சடலத்தை ஒப்படைத்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். பெரம்பூர் ரமணா நகர் ஜீவனந்தம் தெருவை சேர்ந்தவர் ஆனந்த பழனி (73). இவருக்கு ரதி என்ற மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள். இதில், மகன் சுரேஷ்குமார் கடந்த 5 மாதத்திற்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். மகள் வெளிநாட்டில் உள்ளார்.

கடந்த 29ம் தேதி ஆனந்த பழனிக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறி சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து வந்த ஊழியர்கள், ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, பரிசோதனைகள் முடிந்த பின்னர் அவரை அண்ணாநகர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மறுநாள் காலை உறவினர் ராமச்சந்திரன் அந்த மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது, அங்கிருந்தவர்கள், ஆனந்த பழனி நலமாக உள்ளார், என்று கூறி அனுப்பி வைத்துள்ளனர். மீண்டும் 1ம் தேதி அண்ணாநகர் மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது அங்கு அப்படி யாரும் இல்லை என கூறியுள்ளனர்.

உடனடியாக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்று கேட்டபோது, அங்கும் அப்படி யாரும் இல்லை என தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 4 நாட்களாக தேடியும் எந்த தகவலும் இல்லை. இதனால், செம்பியம் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். ஆனால், போலீசார் உரிய பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, ஆன்லைன் மூலம் கமிஷனர் அலுவலகத்திற்கும், முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் புகார் அனுப்பியுள்ளனர். இதனிடையே, கடந்த 9ம் தேதி ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள காவல் நிலையத்தில் இருந்து ஆனந்த பழனி குடும்பத்தினருக்கு அழைப்பு வந்துள்ளது.

அங்கு சென்றபோது, சில சடலங்களில் புகைப்படத்தை காண்பித்து, அடையாளம் காட்டும்படி கூறியுள்ளனர். அதில், ஆனந்த பழனி சடலம் இருப்பது தெரிந்தது. அதிர்ந்துபோன குடும்பத்தினர் உடனடியாக பிணவறை சென்று பார்த்தபோது, அவர் சடலம் இருந்தது. விசாரணையில், மருத்துவமனை அழைத்து வரப்பட்ட மறுநாளே ஆனந்த பழனி உயிரிழந்தது தெரியவந்தது. மேலும், அவர் மாரடைப்பால் இறந்ததும், பரிசோதனை அறிக்கையில் கொரோனா நெகட்டிவ் எனவும் இருந்ததை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து டாக்டரிடம் கேட்டபோது முறையாக பதிலளிக்கவில்ைல, என கூறப்படுகிறது.

பின்னர், சடலத்தை வழங்கும்படி கேட்டபோது, 9ம் தேதி முழுவதும் அலைகழித்துள்ளனர். மறுநாள் சென்றபோது, மருத்துவமனை உயர் அதிகாரிகள், ‘‘கொரோனாவால் ஆனந்த பழனி இறந்தார்,’’ என அறிக்கை தயார் செய்து உடலை ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் நேராக பெரம்பூர் பிபி சாலையில் உள்ள சுடுகாட்டிற்கு உடலை கொண்டு வந்து அடக்கம் செய்துள்ளனர். இதுபற்றி ஆனந்த பழனியின் மருமகள் சுமதி கூறுகையில், ‘‘எனது மாமனாருக்கு கொரோனா உள்ளது என அழைத்து சென்ற அதிகாரிகள், அரசு மருத்துவனையில் இருந்து அண்ணாநகர் மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர்.

அங்கு அவருக்கு உடல் நிலை மோசமானதால், மீண்டும் அரசு மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர். இதில், மாரடைப்பில் அவர் இறந்துள்ளார்.
இதுபற்றி மருத்துவமனை நிர்வாகம் எந்த தகவலும் எங்களுக்கு தெரிவிக்கவில்லை. இதனால், 10 நாட்களாக அவர் எங்கிருக்கிறார் என்பது கூட தெரியாமல் நாங்கள் தவித்து வந்தோம். ஆனால், அவ்வாறு செய்யாமல், 10 நாட்களாக இறந்தவரின் உடலை அனாதை பிணமாக வைத்திருந்தனர். இதுபற்றி கேட்டபோது, முறையாக பதிலளிக்காமல், கொரோனாவால் இறந்தவர் என போலி அறிக்கை தயாரித்து, சடலத்தை ஒப்படைத்தனர்,’’ என்றார்.

Tags : Relatives ,hospital ,hospital authorities , Heart attack, deceased corpse, hospital, relatives
× RELATED ஒடிசாவில் ஒரே தொகுதியில் 3 கட்சிகளில் போட்டியிடும் உறவினர்கள்