×

டிக்டாக் செயலி மூலம் காதல் வலைவீசி: பல பெண்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்த பலே ஆசாமி கைது

வேளச்சேரி: டிக் டாக் செயலி மூலம் காதல் வலை வீசி பல பெண்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்த பலே ஆசாமியை போலீசார் கைது செய்தனர். வேளச்சேரி ராம் நகரை சேர்ந்த உதயகுமார் என்பவர், துபாயில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவர், சில மாதங்களுக்கு முன் விமானம் மூலம் சென்னை திரும்பியுள்ளார். அப்போது அவரை சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் தனிமைப்படுத்தி உள்ளனர். அங்கு, பழைய வண்ணாரப்பேட்டை சண்முகராஜன் தெருவை சேர்ந்த விக்கி (எ) விக்னேஷ் (23) என்பவரும் தனிமைப்படுத்தப்பட்டு இருந்துள்ளார். அவருடன், உதயகுமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது விக்னேஷ், தான் ஒரு தொழிலதிபர் என கூறியுள்ளார்.

மேலும், குடிநீர் விற்பனை மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் விற்பனை செய்வதாகவும், பல கோடி ரூபாய் வருமானம் வருவதாகவும் கூறியுள்ளார். சில நாட்களில் இருவரும் வீடு திரும்பினர். இதையடுத்து, உதயகுமார் வீட்டுக்கு அடிக்கடி வந்த விக்னேஷ், தன்னுடன் இணைந்து தொழில் செய்தால், லாபத்தில் பங்கு தருவதாக உதயகுமாரிடம் கூறியுள்ளார். அதை நம்பி, 12 லட்சம் வரை உதயகுமார் கொடுத்துள்ளார். அதன்பிறகு விக்னேஷ் தலைமறைவானார். அவரது செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதுகுறித்து, வேளச்சேரி காவல் நிலையத்தில் உதயகுமார் புகார் கொடுத்தார்.

தலைமறைவாக இருந்த விக்னேஷை தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது, பல திடுக்கிடும் தகவல்கள்  வெளியானது. இதுகுறித்து போலீசார் கூறியாவது: பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள விக்னேஷ், ஆங்கிலம் சரளமாக பேசுவதால் பிபிஓ நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. இவர், டிக்டாக் செயலியில் அதிகளவில் தனது வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார். இதை பல பெண்கள் லைக் செய்துள்ளனர். அவ்வாறு தனது வீடியோவை லைக் செய்யும் பெண்களுடன் சாட்டிங் செய்வது இவரது வழக்கம். அதன்படி, பல பெண்களிடம் தொடர்பு எண்ணை பெற்று, பழகி வந்துள்ளார்.

ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதாலும், தன்னை வசதியானவர் என கூறியதாலும் பலர் இவரது வலையில் விழுந்தனர். இவர்களில் வசதியான பெண்களை தேர்வு செய்து, அவர்களிடம், ‘‘வெளியில் சென்றபோது சிறிய விபத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன். அவரமாக பணம் தேவை. உங்களிடம் இருந்தால் கொடுங்க. வீட்டுக்கு வந்து, திருப்பி கொடுத்து விடுகிறேன்,’’ என கூறி பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளார். குறிப்பாக, வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் மனைவிகள் இங்கு தனியாக இருப்பது தெரிந்தால், அவர்களுக்கு வேண்டியதை செய்வது போல் நடித்து, பலரிடம் பணம் பறித்துள்ளார்.

சென்னை மட்டுமின்றி வேலூர், பெங்களூரு உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள பெண்கள் இவரிடம் ஏமார்ந்துள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். கைதான விக்னேஷிடம் இருந்து 3 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை சைதாப்பேட்டை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கற்பட்டு சப் ஜெயிலில் அடைத்தனர்.

விமானத்தில் பயணம்
வெளி மாநிலங்களில் உள்ள பெண்களை சந்திக்க செல்லும்போது, டிப்டாப் உடை  மற்றும் கவரிங் நகைகளை அதிகளவில் அணிந்து, விமானத்தில் செல்வது இவரது  வழக்கம். ஒவ்வொறு பெண்ணிடமும் ஒவ்வொறு செல்போன் எண்ணில் பேசியுள்ளார். ஒரு  பெண்ணை ஏமாற்றியதும், அந்த சிம்கார்டை தூக்கி வீசிவிடுவார்.

புகார் கொடுக்க தயக்கம்
பாதிக்கப்பட்ட சில திருமணமான பெண்களை போலீசார் தொடர்புகொண்டு பேசியபோது, ‘‘தங்கள் கணவருக்கு தெரியாமல் பணத்தை கொடுத்தோம். அவருக்கு தெரிந்தால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு, வாழ்கை பாதிக்கப்படும் என்ற பயத்தில் புகார் கொடுக்க முன்வரவில்லை. இதுபோன்ற நபர்களுக்கு கடுமையான தண்டனை வாங்கித்தர வேண்டும்,’’ என தெரிவித்துள்ளனர்.


Tags : millions ,Bale Asami ,women , Tick tock processor, love, many women, Asami arrested
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து...