×

கொரோனாவால் கொண்டாட்டங்கள் முடங்கிய நிலையில் பாரீசில் பாய்ந்தோடும் சீன் நதியில் சினிமா: சமூக இடைவெளியுடன் படகுகள் அமைத்து மகிழ்ச்சி

பாரீஸ்: கொரோனா பரவல் அச்சுறுத்தலினால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ள சூழலில் பிரான்ஸ் தலைநகரான பாரீசில் பாய்ந்தோடும் சீன் நதியில் மிதக்கும் தியேட்டர் அமைக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் ேகாடை காலத்தில் ஆண்டு தோறும் ‘பாரீஸ் பிளேஜஸ்’ என்ற நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். கடந்த காலங்களில் சீன் நதிக்கரையை இந்த கொண்டாட்டங்களுக்கான இடமாக மாற்றி அமைத்துள்ளனர். தற்போது அந்நிகழ்வின் ஒரு பகுதியாக திறந்த வெளியில் மிதக்கும் தியேட்டர் அமைக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் உட்பட பல்வேறு நாடுகள் கொரோனா பிடியிலிருந்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப முயன்று வருகின்றன.

பிரான்சில் திரையரங்குகளும் திறக்கப்பட்ட நிலையில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்பதால் பாரீசின் எம்.கே-2 சினிமா நிறுவனம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையோடு, சீன் நதியில் மிதக்கும் தியேட்டரை அமைத்துள்ளது. இந்த மிதவை தியேட்டரில் சுமார் 38 படகுகள் பார்வையாளர்களுக்கான இருக்கைகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு படகிலும் நான்கு முதல் ஆறு பேர் வரை அமர்ந்து திரைப்படங்களை பார்க்கலாம்.
படகில் அமர்ந்திருப்பவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாகவோ அல்லது நண்பர்களாகவோ இருக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அது தவிர நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள நாற்காலியிலிருந்தும் படங்களை பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள இந்த தியேட்டரை ரசிகர்கள் விரும்பினால் நிரந்தரமாக அமைக்கவும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலுக்கு மத்தியில் மக்களின் பொழுதுபோக்கு கொண்டாட்டங்கள் முடங்கிய நிலையில், தற்போது புதுபுது ஐடியாக்களுடன் மக்கள் தங்களது மகிழ்ச்சி, உல்லாசங்களை அனுபவித்து வருகின்றனர்.

Tags : Seine River ,Corona ,Paris ,Sean River ,festivities , Corona, cinema on the river, social space
× RELATED இன்னும் 100 நாட்கள்!: பாரிஸ் ஒலிம்பிக்...