×

கொரோனா பாதித்தவரை அழைத்து வந்த நண்பர்கள் மாயம்: குமரியில் சமூக தொற்றாக மாறும் அபாயம்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கொரோனா தோற்று வேகமாக பரவி வருகிறது. நகர்ப்புறப் பகுதிகளில் மட்டுமின்றி கிராமப்புற பகுதிகளிலும் தொற்று பாதிப்பு அதிகரித்து உள்ளது. தற்போது ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் நிரம்பியுள்ளதால் வெளியே தனியார் கல்வி கூடங்களில் அமைக்கப்பட்டுள்ள கவனிப்பு மையங்களில் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். தற்போது காய்ச்சல் பாதிப்போரும் மாவட்டத்தில் அதிகரித்துள்ளனர். கொரோனா பரிசோதனைக்கு பயந்து பலர் மருத்துவமனைக்கு செல்வதில்லை. இந்த நிலையில் குளச்சல் அருகே உள்ள ஒரு கடற்கரை கிராமத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்ட முதியவர் மற்றும் அவரது மகனை நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு நண்பர்கள் அழைத்து வந்துள்ளனர்.

இதில் முதியவருக்கும் அவரது மகனுக்கும் மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்ததால் தொற்று பரிசோதனை நடந்தது. இதில் முதியவருக்கு தொற்று பாதிப்பு இல்லை. அதே நேரத்தில் அவரது மகனுக்கு தொற்று இருந்தது தெரிய வந்தது. இதனால் அவரது மகன் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். இது பற்றிய தகவல் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு அவரது மகனுடன் அன்றைய தினம் மருத்துவமனைக்கு வந்து இருந்த நண்பர்களையும் பரிசோதனை நடத்த முடிவு செய்தனர். நண்பர்களின் விபரங்களை வாங்கி சுகாதாரத்துறை அதிகாரிகள் தேடினர். ஆனால் அவர்கள் தலைமறைவாகி விட்டனர். அனைவரின் செல்போன் நம்பர்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. தற்போது அவர்களில் வேறு யாருக்காவது கொரோனா இருக்குமா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

கடற்கரை கிராமங்களை பொறுத்தவரை தற்போது கொரோனா வேகம் அதிகரித்து இருப்பதால் கடற்கரை கிராமங்களில் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தொற்றுப் பாதித்த வாலிபருடன் வந்த நண்பர்கள் மாயமாகி இருப்பது மேலும் பரபரப்பை கூட்டியிருக்கிறது. பொதுவாக சளி, காய்ச்சல், இருமல் உள்ளவர்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொற்று பாதிப்பு உள்ளவர்கள் வெளியே சுற்றி திரிந்தால் அது மேலும் பரவலை அதிகரிக்கும் என்பதால் தான் முகாம்கள் அமைக்கப்பட்டு அதில் அவர்கள் அனுமதி செய்யப்பட்டு வருகிறார்கள்.

எனவே பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே இந்த தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும். பரிசோதனைக்கு பயந்து  தப்பி ஓடுவதால் தொற்று பாதிப்பு அதிகரிக்கும் நிலை ஏற்படும். எனவே தாங்களாகவே முன்வந்து பரிசோதனைகளுக்கு உட்படுத்தி கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags : Friends ,Kumari , Corona, Friends, Magic, Kumari
× RELATED துபாயில் 2 ஆண்டுகளில் பெய்ய வேண்டிய...