×

தீவிர கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் தவிர்க்கப்பட வேண்டும்: மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

புதுடெல்லி: தீவிர கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் தவிர்க்கப்பட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து நல்ல பலன் அளிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அடிக்கடி கூறி வருகிறார். கடுமையான பக்க விளைவுகள் ஏற்படுத்தும் மருந்து இது என்பதால், இந்த மருந்தை அனைவரும் பயன்படுத்தக் கூடாது என்பதும் மருத்துவ நிபுணர்கள் ஒருசாரர் கருத்தாக உள்ளது. இந்த நிலையில், கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதில், மிதமான மற்றும் நடுத்தர பாதிப்புடைய கோவிட்-19 நோயாளிகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் பயன்படுத்த வேண்டும், தீவிர பாதிப்பு நோயாளிகளுக்கு அதை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். மிதமான பாதிப்பு நோயாளிகளில், அதிக உடல்நல பிரச்னையுடைய நோயாளிகளுக்கு, அதாவது 60 வயதுக்கு குறைவானவர்கள், உயர் ரத்தழுத்தம், நீரிழிவு, நீடித்த நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் நோய், மூளை ரத்தக்குழாய் பாதிப்பு மற்றும் உடல்பருமன் பிரச்னை உடையவர்களுக்க தீவிர மருத்துவ மேற்பார்வையில் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரையை பயன்படுத்த வேண்டும். நடுத்தர பாதிப்பு நோயாளிகளுக்கு இசிஜி பரிசோதனைக்குப் பின்பே ஹைட்ராக்கி குளோரோகுயினை பயன்படுத்த வேண்டும். இது தீவிரமான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதால், மருத்துவ பரிந்துரை இல்லாமல், ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரை பயன்படுத்தக் கூடாது, என மத்திய சுகராதரத்துறை தெரிவித்துள்ளது.



Tags : Federal Health Department , Corona, hydroxy chloroquine, Federal Department of Health
× RELATED இதுவரை போட்டது 27 கோடி டோஸ் தடுப்பூசி: மத்திய சுகாதார துறை தகவல்