×

சாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிஐ தீவிர விசாரணை: பெண் காவலர் ஒருவர் கைது செய்யப்படவுள்ளதாக தகவல்

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் பெண் காவலர் ஒருவர் கைது செய்யப்படவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. சிபிஐ விசாரணையில் சாத்தான்குளம் காவல்நிலைய பெண் காவலர் முரண்பட்ட தகவல் அளித்ததாக தகவல் தெரியவந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இது தொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்த சிபிசிஐடி போலீசார், சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐகள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். பின்னர் இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. கைதான இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேரை 2 நாட்கள் காவலில் எடுத்து சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு அழைத்துவந்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். இவர்களில் காவலர் முத்துராஜை தவிர மற்ற 4 பேரையும் மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 4 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சிபிசிஐடி அதிகாரிகளுடன் சிபிஐ அதிகாரிகள் நேற்று 4 மணி நேரம் ஆலோசனை செய்தனர். சிபிசிஐடி விசாரணையில் சேகரிக்கப்பட்ட தகவல்களை சிபிஐ விசாரணையுடன் ஒப்பிட்டும் ஆய்வு செய்யப்பட்டது. இந்நிலையில் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக பெண் காவலர் அளித்த தகவல்களில் முரண்பாடு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிபிஐ விசாரணையில் சாத்தான்குளம் காவல்நிலைய பெண்  காவலர் முரண்பட்ட தகவல் அளித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து பெண் காவலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே தந்தை, மகன் கொலை வழக்கில் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்துகிறது. மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 10 காவலர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. விசாரணை கைதிகளை தாக்கியது ஏன்? எவ்வாறு தாக்கப்பட்டனர்? உயிரிழந்தது எப்படி என்பது குறித்து விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Sathankulam ,CBI ,police officer , Sathankulam murder case, CBI, female police officer arrested
× RELATED சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு.:...