×

தென்மேற்கு பருவ மழையால் கிடைக்கும் மழைநீர் வீணாகாமல் இருக்க காட்டாறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும்; பொதுமக்கள், விவசாயிகள் வலியுறுத்தல்

வேலூர், ஜூலை 18: தமிழகத்தில் ஜூலை தொடங்கி செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவ மழை சீசன் தொடங்கியுள்ளது. இந்த சீசனில் நேற்று வரை பல மாவட்டங்கள் சராசரியை விட அதிகமாகவே மழை பொழிவை பெற்றுள்ளன. அதிலும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை தற்போது சராசரியை விட ஜூலை 13ம் தேதி வரை 246.6 மி.மீ மழையை பெற்றுள்ளது. அத்துடன் தமிழக எல்லையை ஒட்டியுள்ள ஆந்திரப்பகுதிகளில் நல்ல மழை பொழிவு உள்ளதால் பேரணாம்பட்டு பத்தலப்பல்லி வழியாக ஓடி வரும் மலட்டாற்றிலும், கவுண்டன்யாவிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மோர்தானா அணை பல ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி வருகிறது. அதேபோல் வாணியம்பாடி, ஆம்பூர், ஆலங்காயம், நாட்றம்பள்ளி, அணைக்கட்டு வட்டாரங்களில் பல காட்டாறுகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்வரத்து கண்டுள்ளது. தற்போது இந்த காட்டாறுகளின் குறுக்கே அணைக்கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.குறிப்பாக வாணியம்பாடி அடுத்த வெலதிகமானிபெண்டா ஊராட்சியின் வடக்கில் உள்ள காப்புக்காட்டின் அடர்ந்த வனப்பகுதியில் பெய்யும் மழை நீரை ஆதாரமாக கொண்டு உருவாகும் காட்டாறு சிலம்புக்குட்டை கானாறு என்ற பெயரில் தெற்காக ஓடி மல்லப்பநாய்க்கன் கோயில் அருகில் மேற்கில் திரும்பி வெலதிகமானிபெண்டா கிராமம் வழியாக சிந்தகமானிபெண்டா கிராமத்தின் கிழக்கு பக்கமாக ஓடி ஆந்திர மாநிலத்துக்குள் நுழைகிறது.

அங்கு சித்தூர் மாவட்டம் குப்பம் தாலுகா ராமகுப்பம் மண்டலம் கங்குந்தி ஊராட்சி தேவராஜபுரம், ஆரிமானிபெண்டா வழியாக தமிழக எல்லைக்குள் மீண்டும் பிரவேசிக்கிறது. அங்கிருந்து நாட்றம்பள்ளி அடுத்த நாராயணபுரம், அலசந்தாபுரம் கிராமங்களின் வழியாக மண்ணாறாக உருவாகி திம்மாம்பேட்டை அருகில் பாலாற்றுடன் சங்கமிக்கிறது.இந்த கானாற்றின் குறுக்கே 5 ஆண்டுகளுக்கு முன்பு வெலதிகமானிபெண்டா மலையடிவாரத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் 40 அடி உயரத்தில் 30 அடி உயரம், 15 அடி நீளத்தில் மண்ணால் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த அணையில் தண்ணீர் நிரம்பி வருகிறது. இது நிரம்பி வழியும் உபரி நீர் மீண்டும் காட்டாற்றுக்கு திருப்பிவிடும் வகையில் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.அதேபோல் நாட்றம்பள்ளி அடுத்த தும்பேரி ஊராட்சி அண்ணா நகர் மேல்பகுதியில் மலைகளில் மழைக்காலங்களில் உருவாகும் காட்டாறு மலைகளின் கீழே இறங்கி கிழக்கு நோக்கி செல்கிறது. இதன் குறுக்கேயும் இரண்டு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.

வெலதிகமானிபெண்டா அருகில் உற்பத்தியாகி ஆந்திர மாநிலத்துக்குள் நுழைந்து மீண்டும் தமிழகம் நோக்கி வரும் சிலம்புக்குட்டை கானாற்றில் ஆண்டுக்கு 6 மாதங்கள் வரை நீர்வரத்து இருக்கும். ஆனால் ஆந்திர பகுதியில் இதன் குறுக்கேயும் ஆங்காங்கே தடுப்புச்சுவர்களை கட்டி ஆந்திர அரசு அம்மாநில விவசாயிகளை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அங்கு அவர்கள் பயன்படுத்தியது போகத்தான் உபரியாக இருந்தால் மட்டுமே பாலாற்றுக்கு வரும் நிலை உள்ளது.
எனவே, இந்த காட்டாற்றின் குறுக்கே மாதகடப்பா செல்லும் வழியில் உள்ள மல்லப்பநாயக்கன் கோயில் அருகில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர். இத்தடுப்பணை நிரம்பி அதன் மூலம் கிடைக்கும் உபரி நீரை கால்வாய் மூலம் தெற்காக கொண்டு வந்து புளியமரத்துபெண்டா வனப்பகுதியில் உற்பத்தியாகி வரும் மாமரத்து கானாற்றுடன் இணைக்க வேண்டும். அங்கிருந்து 4 கி.மீ மலைச்சரிவில் பாய்ந்து வரும் நீர் தும்பேரி ஊராட்சி அண்ணா நகர் தடுப்பணையில் சேர்ந்துவிடும்.இதன் மூலம் தும்பேரி கக்கறகோனை கானாற்றுக்கு நீர்வரத்து கிடைத்துவிடும். மேலும் அண்ணா நகர் மேற்கு தடுப்பணையில் சேரும் நீர் தெற்காக ஓடை மூலம் திருப்பிவிடப்பட்டு அங்குள்ள பழைய தடுப்பணையில் சேர்ந்து அங்கிருந்து வெளியேறும் உபரிநீர் மூலம் நாகனேரி, மதனாஞ்சேரி ஏரி, பள்ளிப்பட்டு ஏரி, உதயேந்திரம் ஏரிகளுக்கு நீராதாரம் கிடைக்கும். இதன் மூலம் இப்பகுதியில் உள்ள பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெறும்.

அதேபோல் வாணியம்பாடி தாலுகா மதனாஞ்சேரி அருகில் வெள்ளைமலை துர்கம் மலையில் 5 காட்டாறுகளும், தாதன்கொல்லையில் இருந்தும் தரைக்காட்டில் இருந்தும் 2 காட்டாறுகளும் உருவாகி ஒன்றிணைந்து இருளங்குத்து ஆலமரத்து கணவாயில் பெரிய கானாறு என்ற பெயரோடு மேல்குப்பம், இளைய நகரம், கொல்லகுப்பம், வடச்சேரி, சின்னபள்ளிகுப்பம், மேல்சாணாங்குப்பம் மணியாரகுப்பம், வீராங்குப்பம், குமாரமங்கலம், கம்மகிருஷ்ணபள்ளி வழியாக பாலாற்றை அடை
கிறது.இந்த கானாற்றிலும் ஆண்டுக்கு ஆறு மாதங்களுக்கு மேல் நீர்வரத்து இருக்கும். மழைக்காலங்களில் அதிக வெள்ளப்பெருக்கு  ஏற்பட்டு கரைகளை உடைத்தெறிந்து பெரும் சேதத்தையும் ஏற்படுத்தும். இந்தளவு நீர்வரத்து உள்ள பெரியகானாற்றில் இருளங்குத்து, தாதன்கொல்லை இடையே 100 அடி உயர தடுப்பணையை கட்டி மழைக்காலங்களில் கிடைக்கும் வெள்ள நீரை சேமிக்கலாம். இதன் மூலம் மதனாஞ்சேரி, பள்ளிப்பட்டு, ஜாப்ராபாத் என 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகளுடன், உதயேந்திரம் பேரூராட்சியும் குடிநீராதாரத்தை பெறும். அதோடு ஊத்துக்கொல்லை தடுப்பணைக்கும் இணைப்பு கொடுக்க முடியும். எனவே, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் நிலத்தடி நீராதாரத்தை மேம்படுத்த இதுபோன்ற நீர்வரத்துமிக்க காட்டாறுகளின் குறுக்கே தடுப்பணைகளை கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர் விவசாயிகள்.


Tags : public ,forests , Southwest monsoon, dams, public, farmers
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...