×

ஆடிமாத முதல் வெள்ளிக்கிழமையில் அம்மன் கோயில்களுக்கு படையெடுத்த பக்தர்கள்; வெளியில் நின்றபடியே வழிபாடு

சேலம்: தமிழகத்தில் ஆடிமாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இதனால், அந்த மாதத்தில் வரும் அனைத்து விஷேச நாட்களிலும், அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். ஆனால் நடப்பாண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்கள் மூடப்பட்டு, பக்தர்களின் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஆடிமாத முதல் வெள்ளிக்கிழமை நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சேலம் மாநகரில் உள்ள கோட்டை மாரியம்மன், செவ்வாய்பேட்டை மாரியம்மன், காளியம்மன், குகை மாரியம்மன், காளியம்மன் கோயில்களுக்கு நேற்று காலை முதலே பக்தர்கள் படையெடுத்தனர்.

ஆனால், ஊரடங்கு காரணமாக கோயில்கள் பூட்டப்பட்டிருந்ததால், வெளியில் நின்றபடியே வழிபாடு நடத்தி சென்றனர். ஒருசில கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்கள் சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, அம்மாப்பேட்டை காளியம்மன் கோயிலில் அம்மனுக்கு காலையிலேயே அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல், தண்ணீர் பந்தல் காளியம்மன் கோயிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. அதேசமயம், கிராமப்புறங்களில் கோயில்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, வாழப்பாடி, ஆத்தூர், மேட்டூர், சங்ககிரி, ஓமலூர் உள்பட மாவட்ட புறநகரில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, பக்தர்களின் வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Tags : Devotees ,goddess , Audi, Friday, Goddess temples, worship
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...