×

ஆரணியில் ஆக்கிரமிப்பு செய்துள்ள கோயிலுக்கு சொந்தமான நிலத்தை ஒப்படைக்காவிட்டால் போராட்டம்; இந்து முன்னணி கோட்ட அமைப்பாளர் தகவல்

ஆரணி: ஆரணியில் ஆக்கிரமிப்பு செய்துள்ள கோயிலுக்கு சொந்தமான நிலத்தை திரும்ப ஒப்படைக்காவிட்டால், மாவட்ட அளவில் போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி கோட்ட அமைப்பாளர் ராஜேஷ் தெரிவித்துள்ளார். ஆரணி காமராஜர் சிலை எதிரே காசி விஸ்வநாதர் கோயில், அரியாத்தம்மன் கோயில், புத்திர காமேட்டீஸ்வரர் கோயில், ஜெயினர் கோயில், காமாட்சியம்மன் கோயில் ஆகியன இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயில்களுக்கு சொந்தமான  6 ஏக்கர் நிலத்தில், தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அதில் 4 நபர்கள், நிலத்திற்கு சம்பந்தப்பட்டவர்களிடம் ஒரு ஏக்கர் 44 செண்ட் நிலத்திற்கு முறையாக பணம் கொடுத்து வாங்கியதாக கூறி, நேற்று முன்தினம்  ஜேசிபி மூலம் அந்த இடத்தில் மண் கொட்டி சமன் செய்தனர்.

அப்போது,  அங்கு வந்த இந்து முன்னணி, பாஜ மற்றும் பாமக நிர்வாகிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து, இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், செயல் அலுவலர் சிவாஜி, ஆய்வாளர் நடராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆக்கிரமிப்புகளை தடுத்து நிறுத்தினர்.  தொடர்ந்து, செயல் அலுவலர் சிவாஜி டவுன் போலீசில் புகார் அளித்தார்.அதன்பேரில் டிஎஸ்பி செந்தில், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி ஆகியோர், செயல் அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, இருதரப்பினரும் அளித்த ஆவணங்களை பெற்றுக்கொண்டு, அதனை வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆக்கிரமிப்பு தொடர்பாக இந்து முன்னணி வேலூர் கோட்ட அமைப்பாளர் ராஜேஷ் கூறியதாவது:தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 36 ஆயிரம் கோயில்கள் உள்ளது. இந்த கோயில்களுக்கு சொந்தமாக நஞ்சை, புஞ்சை நிலமாக 6 லட்சம் ஏக்கர் உள்ளது. அதில் 2 லட்சம் ஏக்கர் அரசியல்வாதிகள், தனிநபர்கள், சமூக விரோதிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், இந்து அறநிலையத்துறை கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் இருந்து கிடைக்கும் வருவாய், வரி போன்றவைகளை முறையாக வசூலிப்பதில்லை. அதிலும், ஆரணியில்   ஆக்கிரமித்துள்ள இந்த நிலத்தின் மதிப்பு மட்டுமே 70 கோடி. அதனால், தமிழகத்தில்  உள்ள மொத்த கோயில்களுக்கும் சொந்தமான நிலங்களின் நிலைமை  என்னவாக இருக்கும்.

எனவே, இந்து அறநிலையத்துறை கோயிலுக்கு சொந்தமான  நிலத்தை போலியாக பட்டா போட்டு கொடுத்த அதிகாரிகள்  மீதும், கோயில் சொத்துக்களை முறையாக பராமரிக்க தவறிய செயல் அலுவலர், ஆய்வாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஆரணியில் ஆக்கிரமித்துள்ள கோயில் நிலத்தை திரும்ப ஒப்படைக்கவிட்டால், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டத்தில் உள்ள மக்களை ஒன்றிணைத்து, இந்து முன்னணி சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : land ,Arani , Arani, Occupier, Hindu Front Divisional Organizer
× RELATED போராட்டம்