×

குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் முற்றுகை போராட்டம்

பெரம்பூர்: சென்னை கொடுங்கையூர் வாசுகி நகரில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு சமீப காலமாக சரிவர குடிநீர் வழங்கப்படுவது இல்லை என்றும், குடிநீரில் அடிக்கடி  கழிவுநீர் கலந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், பொது குழாய்களில் குடிநீர் வராத நேரங்களில், லாரிகள் மூலம்  தண்ணீர் வழங்கப்பட்டு வந்ததாகவும், தற்போது கொரோனா தொற்றை காரணம் காட்டி லாரிகளில்  தண்ணீர் வழங்குவதில்லை, என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை இந்த பகுதியில் உள்ள குடிநீர் வாரிய உதவி பொறியாளரை தொடர்புகொண்டு தெரிவித்தபோது, அவர் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை, என குற்றம்சாட்டப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் நேற்று காலை, வாசுகி நகர் பூங்கா அருகே குடிநீர் வாரிய அலுவலகத்தை, காலி குடங்களுடன் முற்றுகையிட்டனர். தகவலறிந்து அங்கு வந்த கொடுங்கையூர் போலீசார், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ‘‘குடிநீர் முறையாக வழங்காததால் கடும் சிரமப்படுகிறோம். இதுபற்றி அதிகாரிகளிடம் முறையிட்டால் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் போராட்டத்தில் ஈடுபடுகிறோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்தால்தான் இங்கிருந்து கலைந்து செல்வோம்,’’ என்றனர்.

இதையடுத்து குடிநீர் வாரிய பகுதி செயற் பொறியாளர் ஏழுமலை சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இனி இதுபோன்ற தவறு நடக்காது. தொடர்ந்து குடிநீர் வழங்க ஏற்பாடு செய்கிறோம், என உறுதியளித்தார். அதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த முற்றுகை போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Tags : Women blockade protest , Drinking water, women, siege struggle
× RELATED விராலிமலை ஊராட்சி அலுவலகம் முன்...