×

திருவள்ளூர் செய்தி துளிகள்

மொபட் எரிப்பு
பட்டாபிராம்: ஆவடி அடுத்த பட்டாபிராம், காமராஜபுரம், திருவள்ளுவர் குறுக்கு தெருவை சேர்ந்தவர் முகமது சபி (35). இவர், பட்டாபிராம், வடக்கு பஜார் மார்க்கெட்டில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு முகமதுசபி வேலை முடிந்து மொபட்டில் வீட்டுக்கு வந்தார். பின்னர் மொபட்டை வீட்டுக்கு வெளியே நிறுத்திவைத்திருந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை 5 மணி அளவில் அவரது மொபட் தீப்பற்றி எரிந்தது. சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்த முகமதுசபி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தண்ணீர் ஊற்றி மொபட்டில் பற்றிய தீயை அணைத்தார். இதில், அவரது மொபட் முழுவதும் எரிந்து சேதமானது. இதுகுறித்து, பட்டாபிராம் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் வியாபாரி மொட்டை எரித்த மர்ம நபர்களை தீவிரமாக தேடுகின்றனர்.

வீட்டில் கொள்ளை
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை அருகே திருப்பேடு பகுதியை சேர்ந்தவர் மாரியம்மாள் (58). இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாதர்பாக்கம் பகுதிக்கு உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். பின்னர் மாரியம்மாள் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 4 கிராம் தங்கம், குத்து விளக்கு, ₹10 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளைபோனது தெரியவந்தது. இதுகுறித்து, கவரப்பேட்டை காவல்நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவமனைக்கு சீல்
திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பழைய தர்மராஜா கோயில் அருகே இயங்கி வரும் கால்நடை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பணிபுரியும் உதவியாளர் ஒருவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் நேற்று முன்தினம் கொரோனா நோய்தொற்று இருப்பது உறுதியானது.
இதைத்தொடர்ந்து, உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் திருத்தணி கால்நடை மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.

தாசில்தார் ஆய்வு
பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை, பெரிய நாகபூண்டி கிராமங்களில் கொரோனா தடுப்பு  பணிகள் தொடர்பாக தாசில்தார் சாரதி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, முகக்கவசமின்றி  இருசக்கர வாகனங்களை சுற்றித்திரிந்த இளைஞர்களை மடக்கிப்பிடித்து அவர்களிடமிருந்து ₹50 வீதம் அபராதம் வசூல் செய்யப்பட்டது. மேலும், பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், வீடுகளில் இருந்து கடைகளுக்கு பொருட்கள் வாங்க வெளியே செல்லும்போது சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 


Tags : Tiruvallur News Drops ,Tiruvallur News , Tiruvallur ,News Drops
× RELATED திருவள்ளூர் செய்தி துளிகள்