×

லா லிகா கால்பந்து தொடர் 34வது முறையாக ரியல் மாட்ரிட் சாம்பியன்; பார்சிலோனா ஏமாற்றம்

மாட்ரிட்: ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து தொடரில்,  ரியல் மாட்ரிட் அணி 34வது முறையாக  சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. கொரோனா பீதியால்  மார்ச் 9ம் தேதியுடன் இடைநிறுத்தப்பட்ட இந்த தொடர், கடந்த ஜூன் 12ம் தேதி மீண்டும் தொடங்கியது. அப்போது  பார்சிலோனா அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது.  பிறகு நிலைமை  மாற ஆரம்பித்தது. பார்சிலோனா அணியை பின்னுக்கு தள்ளி ரியல் மாட்ரிட் முதல் இடத்துக்கு  சென்றது. அதிலும் ஜூலை 1ம் தேதி இந்த 2 அணிகளும் மோதிய ஆட்டம் டிராவில் முடிய பார்சிலோனாவின் முன்னிலை தொடர்ந்தது. கொரோனாவுக்கு பிறகு  ரியல் மாட்ரிட் ஆடிய 9 ஆட்டங்களில் ஒன்றில் கூட அந்த அணி தோல்வியை சந்திக்கவில்லை. அதனால்  ரியல் மாட்ரிட் சாம்பியன் பட்டம் வாய்ப்பில் முன்னிலையில் இருந்தது.

இந்நிலையில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஓசாசுனா அணியை வீழ்த்தியதை அடுத்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவது உறுதியானது. இன்னும் ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில் ரியல் மாட்ரிட் அணி 86 புள்ளிகளும், பார்சிலோனா 79 புள்ளிகளும் பெற்றுள்ளன. இதனால், ரியல் மாட்ரிட் அணி 34வது முறையாக லா லிகா கோப்பையை முத்தமிட்டு சாதனை படைத்தது.போட்டி இம்மாதம் 19ம் தேதி முடிய உள்ள நிலையில் லா லிகா கோப்பை நேற்றே  ரியல் மாட்ரிட் அணிக்கு வழங்கப்பட, வீரர்கள் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனார்.

ஜிடேனுக்கு 2வது கோப்பை
ரியல் மாட்ரிட் அணிக்கு  2016ம் ஆண்டு முதல்  பயிற்சியாளராக  பிரசான்சை சேர்ந்த ஜினடின் ஜிடேன் (48) இருக்கிறார்.  அவரது பயிற்சியின் கீழ்  மாட்ரிட் அணி 2வது முறையாக கோப்பையை வென்றுள்ளது.  பிரான்ஸ்  தேசிய அணிக்காக 108 போட்டிகளில் விளையாடிய ஜிடேன் 1998ம் ஆண்டு உலக கோப்பை வெல்ல காரணமாக இருந்தார்.  தொடர்ந்து 2006ம் ஆண்டு இறுதிப்போட்டியில் ஜிடேன், இத்தாலி வீரர் மார்கோ மாட்டராஸியை தலையால் முட்டித் தள்ளியதால் ரெட் கார்டு காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது தோல்விக்கு காரணமாக அமைந்தது.

ரொனால்டோ இல்லாமல்
ரியல் மாட்ரிட் அணியின் முக்கிய வீரராக இருந்து வந்த  கிறிஸ்டியானோ ரொனால்டோ(போர்ச்சுகல்),  இத்தாலியின் ஜூவென்டஸ் அணிக்கு மாறிய பிறகு மாட்ரிட் வெல்லும் முதல் லா லிகா கோப்பை இது.

கலைந்த ஹாட்ரிக் கனவு
நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி  இந்த முறை கோப்பையை வென்றிருந்தால் ஹாட்ரிக் வெற்றியாக மாறியிருக்கும்.  பார்சிலோனா அணி இதுவுரை  26 முறை லா லிகா வென்றுள்ளது.  அதுமட்டுமல்ல  பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் லியோனல் மெஸ்ஸி (அர்ஜென்டினா)  அணி மாறப் போகிறார் என்ற தகவல்கள் வலம் வருகின்றன. அதனால் மெஸ்ஸி  வெற்றியுடன் விடை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அணியின் கனவுடன் அவரது கனவும் கலைந்து விட்டது.

Tags : Barcelona ,La Liga ,Real Madrid , La Liga football, Real Madrid champions, Barcelona
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...