×

போலி வாக்குறுதிகளை தருகிறார் மல்லையா இந்தியா வருவதற்கு முன் செட்டில்மென்ட் செய்யட்டும்: உச்ச நீதிமன்றத்தில் தகவல்

புதுடெல்லி: வங்கிகளிடம் வாங்கிய கடனை தீர்க்க செட்டில்மென்டாக 13,960 கோடி தர மல்லையா முன்வந்ததை ஏற்க மறுத்துள்ள மத்திய அரசு, மல்லையாவின் போலி வாக்குறுதிகளை ஏற்க முடியாது. வேண்டுமானால், இந்தியா வருவதற்கு முன்பே செட்டில்மென்ட்  செய்யட்டும் என தெரிவித்துள்ளது.  கிங்பிஷர் அதிபர் விஜய்மல்லையா, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடன் 9,000 கோடிக்கு மேல் நிலுவையில் உள்ளது. கடன், வட்டி அபராதம், வழக்குச்செலவு எல்லாம் சேர்த்து அவர் தர வேண்டிய தொகை இன்னும் அதிகம்தான். இருப்பினும், அவரிடம் இருந்து கடன் தொகையை மீட்க வங்கிகள் போராடி வருகின்றன.

 லண்டனில் பதுங்கியுள்ள அவரை நாடு கடத்த மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. தனக்கு எதிரான வழக்குகளில் மல்லையா தோல்வி அடைந்துள்ள நிலையில், அவரை நாடு கடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இதற்கிடையில், அமலாக்க துறையின் சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கு மற்றும் வங்கிகள் தொடர்ந்த வழக்குகளில் இருந்து விடுபட 19,960 கோடி செட்டில்மென்ட் தருவதாக மல்லையா தரப்பில் கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

 அப்போது, மல்லையா தரப்பில்ஆஜரான வழக்கறிஞர், மல்லையா வங்கிகளுக்கு செட்டில்மென்ட் தருவது பற்றி தெரிவித்தார். இதற்கு அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டார் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘மல்லையாவை நாடு கடத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனால், இதில் இருந்து தப்பிக்க அவ்வப்போது இதுபோன்ற வாக்குறுதிகளை தருவது அவரது வழக்கமாக உள்ளது. இதில் நம்பகத்தன்மை இல்லை. இதை ஏற்க முடியாது. அவர் செட்டில்மென்ட் செய்வதாக இருந்தால், அதை அவர் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பு செய்ய வேண்டும்’’ என்றார்.

Tags : Mallya ,India , False promises, Mallya, India, Supreme Court
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!