×

புதிய எம்பிக்கள் 22ம் தேதி பதவியேற்பு

புதுடெல்லி: மாநிலங்களவைக்கு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் வரும் 22ம் தேதி பதவியேற்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 20 மாநிலங்களில் இருந்து 61 எம்பிக்கள் மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமிழகத்தில் அதிமுக சார்பில் கே.பி.முனுசாமி, தம்பிதுரை, ஜி.கே.வாசன் ஆகியோரும், திமுக சார்பில் திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ மற்றும் அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் போட்டியின்றி வெற்றி பெற்றனர். இதைத்தவிர ஆந்திரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா, ஜார்கண்ட் மற்றும் மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களிலும் மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. அதில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, ஜோதிராதித்ய சிந்தியா, திக் விஜய சிங், ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சிபுசோரன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


இந்த நிலையில் நேற்று ஒரு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் நாடாளுமன்றத்தின் மாநிலங்களைவைக்கு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் வரும் 22ம் தேதி பதவியேற்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் பயண கட்டுப்பாடு இருப்பதால் அனைத்து எம்பிக்களும் பதவியேற்க மாட்டார்கள் என தெரிகிறது. இதில் பதவியேற்க முடியாதவர்கள் மழைக்கால கூட்டத்தொடரில் பதவியேற்பார்கள். விழாவில், சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடைபிடிக்கப்படும்.

Tags : MPs , New MPs
× RELATED பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்த 44...