×

கடைகளுக்கு கொள்முதல் செய்யப்படும் டாஸ்மாக் மதுபாட்டிலில் கரப்பான் பூச்சி, எறும்பு: ஊழியர்கள் புகார்

சென்னை: டாஸ்மாக் கடைகளுக்கு இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களில் கரப்பான் பூச்சி மற்றும் எறும்புகள் அதிக அளவில் கிடப்பதாக டாஸ்மாக் கடை ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.   கொரோனா தாக்கத்தால் ஆலைகளில் 50 சதவீத ஊழியர்களை சுழற்சி முறையில் பணியாற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால்,  மதுபான ஆலைகளின் உற்பத்தி பிரிவில் மதுபானங்களை ஆய்வு செய்யும் ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஆலைகளில் மதுபானங்கள் அடைக்கப்படும் பாட்டில்களை சுத்தம் செய்யும் பணியும், அதை கண்காணிக்கும் பணியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே, கடந்த சில நாட்களாகவே டாஸ்மாக் கடைகளுக்கு இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களில் கரப்பான் பூச்சி, பாசி, எறும்பு உள்ளிட்டவைகள் அதிக அளவில் காணப்படுவதாக கடை பணியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.  இதுகுறித்து டாஸ்மாக் கடை பணியாளர்கள் கூறுகையில், ‘‘மதுபான ஆலைகளில் உற்பத்தி பிரிவில் உள்ள தானியங்கி இயந்திரத்தில் பிளன்டிங் முடித்து லேபிள் ஒட்டுவதற்கு முன்னர் ஒரு நிமிடத்திற்கு 240 பாட்டில்களை 8 ஊழியர்கள் கண்காணிப்பார்கள். அடைக்கப்பட்ட மதுபான பாட்டிலில் கண்ணாடி துகள்கள், பாசிகள், பூச்சிகள், எறும்புகள் உள்ளதா என்று பார்வையிட்டு அதை நீக்குவார்கள்.

ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பாட்டில்களை சரிவர ஆய்வு செய்வதில்லை. இதனால், தற்போது கடைகளுக்கு இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களில் அதிக அளவில் எறும்பு, கரப்பான் பூச்சி உள்ளிட்டவைகள் உள்ளன. இதுபோன்ற பாட்டில்கள் கடைகளுக்கு வரும்போது அதற்கான இழப்பீட்டு தொகையை ஊழியர்களே தங்களின் கைகளில் இருந்து கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே, ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களை தீவிரமாக கண்காணித்து அதற்கு பிறகே கடைகளுக்கு கொள்முதல் செய்ய வேண்டும்’’ என்றனர்.


Tags : stores , Shops, Tasmac liquor, cockroach, ant, staff
× RELATED ஆந்திராவில் மதுபானக்கடைகளை மூட உத்தரவு..!!