பெரியபாளையம் பவானியம்மன் கோயில் ஆடித்திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை: மடக்கி திருப்பி அனுப்பிய போலீசார்

சென்னை: பெரியபாளையம் பவானியம்மன் கோயில் ஆடித்திருவிழாவிற்கு, ஆயிரக்கணக்கான பெண்கள், ஆண்கள் என பக்தர்கள் பாதயாத்திரையாக கோயிலுக்கு வந்தனர். அவர்களை போலீசார் மடக்கி வீடுகளுக்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் ஆடித்திருவிழா  16ம் தேதி தொடங்கியது. இந்த விழா, 10 வாரங்களுக்கு நடைபெறும். இத்திருவிழாவிற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா  என பல்வேறு பகுதிகளில் இருந்து பத்தகர்கள் வருவார்கள்.

கார், பஸ்,  வேன்,  ஜீப், லாரி, ஆட்டோ,  மாட்டு வண்டி  உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வந்து சனிக்கிழமை இரவு தங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை பொங்கல் வைப்பார்கள். பின்னர், மொட்டையடித்து, வேப்பிலை ஆடை அணிந்து கோயிலை வலம் வந்தும், ஆடு, கோழிகளை அம்மனுக்கு பலியிட்டும் தங்கள் நேர்த்தி கடனை செலுத்துவார்கள். தற்போது, கொரோனா பரவலை தடுக்க கோயில் திறக்கப்படவில்லை, மேலும், தொற்று காரணமாக உபயதாரர்கள், பக்தர்கள் யாருக்கும் கோயிலில் அனுமதி இல்லை என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் கோயிலை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நேற்று ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி பெரியபாளையத்தை சுற்றியுள்ள  பகுதிகளிகளிருந்து ஏராளமான பெண்கள், சிறுவர்கள் மஞ்சள், சிவப்பு ஆடை அணிந்து பாதயாத்திரையாக பெரியபாளையம் கோயிலுக்கு வந்தனர். அவர்களை, பெரியபாளையம் போலீசார் கிராம எல்லையில் மடக்கி, திருப்பி அனுப்பினர். சென்னையில் இருந்து ஆட்டோ, வேனில் வந்த பக்தர்களை மடக்கி 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது போலீசார்  வழக்குப்பதிவு செய்தனர்.

Related Stories: