×

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கிய கடன் தவணை வசூலை ஒத்திவைக்க வேண்டும்: அன்புமணி வேண்டுகோள்

சென்னை: பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் மூன்றரை லட்சத்திற்கும் கூடுதலான மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் நோய் அச்சத்தால் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக சிதைந்து விட்டது. மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் சிறு தொழில்களிலும்,  சிறு வணிகங்களிலும் செய்திருந்த முதலீடுகள் முற்றிலுமாக அழிந்து விட்டன. அதனால், மகளிர் வாங்கியிருந்த கடன்களுக்கான தவணைகளை குறித்த காலத்தில் அவர்களால் செலுத்த முடியவில்லை.

இந்த சூழலை புரிந்து கொள்ள முடியாத தனியார் வங்கிகளும், நிதிநிறுவனங்களும் தங்களிடம் பெற்ற கடனுக்கான தவணையை உடனடியாக திருப்பிச் செலுத்தும்படி மிரட்டல் விடுப்பதாக தெரிகிறது.  சில இடங்களில் பொதுத்துறை வங்கிகளும் தொண்டு நிறுவனங்கள் மூலம் நெருக்கடி கொடுக்கின்றன. சில இடங்களில் தனியார் நிதி நிறுவனங்களின் கடன் வசூல் முகவர்கள் மகளிர் சுயஉதவிக் குழுவினரை கண்ணியக் குறைவாக நடத்துவதாக செய்திகள் வெளிவருகிறது.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் தவணை வசூலை அடுத்த 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கும்படி வங்கிகள், தனியார்துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி ஆணையிட வேண்டும். கடன் தவணை ஒத்திவைப்புக்காலத்தில் தவணைத் தொகை மீதான வட்டியையும் ரத்து செய்ய ரிசர்வ் வங்கி ஆணையிட வேண்டும். கிராமப்புறங்களில் தவணை செலுத்தும்படி மிரட்டுவோர் மீது குற்றவழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு அரசு ஆணையிட வேண்டும்.

Tags : self-help groups ,Anbumani ,women , Women's self-help groups, loan installments, Anbumani
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாத பாஜவை...