×

கொரோனாவிலிருந்து குணமான பின் நோய் எதிர்ப்பு சக்தி நீங்கி மீண்டும் வைரஸ் தாக்குமா? ஆய்வாளர் விளக்கம்

புதுடெல்லி: கொரோனா சிகிச்சையில் குணமான பின் அடுத்த 3 வாரத்தில் நோய் எதிர்ப்பு சக்தி நீங்கி மீண்டும் வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக வெளியான தகவல் குறித்து ஆய்வாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு ஒரு முறை ஆளாகி நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டு விட்டால், மீண்டும் வைரஸ் தாக்காது என்ற எண்ணத்தில் மண் அள்ளிப் போட்டது லண்டன் கிங்ஸ் கல்லூரி ஆய்வு முடிவு. கொரோனா தாக்குதலுக்கு ஆளான 90 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில், குணமடைந்த 3 வாரங்கள் வரை மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி தரும் ஆன்டிபாடிகள் அதிகபட்ச திறனுடன் இருப்பதாகவும், அதன்பிறகு மிக வேகமாக குறைந்து வருவதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இதனால் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் அடுத்த 3 வாரங்களுக்குப் பிறகு பொது இடங்களுக்குச் செல்லும் போது மீண்டும் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக அந்த ஆய்வு முடிவுகள் பீதியை கிளப்பின.  இது குறித்து புனே இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்சின் நோய் எதிர்ப்பு நிபுணர் வினீதா பால் கூறுகையில், ‘‘கொரோனா தொற்று ஏற்பட்டே 6-7 மாதங்கள் தான் ஆகிறது. 2வது முறையாக தொற்று ஏற்பட்டதாக ஆய்வில் எடுத்துக் கொள்ளப்பட்டவர்கள் ஜனவரி மாதத்தில் பாதிக்கப்பட்டவர்கள்.

அவர்களின் உடலில் கொரோனா வைரசை தடுக்கும் ஆன்டிபாடி அளவு குறைந்ததால்தான் மீண்டும் தொற்று ஏற்பட்டது என்பதை உறுதியாக கூறி விடமுடியாது. இவ்வளவு குறுகிய காலத்தில் இதை கணிப்பது சரியாக இருக்காது. இதை உறுதிப்படுத்த நமக்கு இன்னும் நிறைய புள்ளிவிவரங்கள் தேவை’’ என்றார்.

Tags : Corona, Immunity, Analyst, Corona
× RELATED அண்மையில் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பை...