×

அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் தமிழில் பேச தடை: தொழிலாளர்கள் தர்ணா

குன்னூர்: குன்னூர் அருகே உள்ள அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையில் தமிழில் பேச தடை விதித்த பொது மேலாளரை கண்டித்து தொழிலாளர்கள் கொட்டும் மழையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருவங்காடு பகுதியில் மத்திய அரசின் வெடிமருந்து தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் வெடி மருந்து தொழிற்சாலை தொழிலாளர்கள் தங்களது பாதுகாப்பு குறித்து பல்வேறு கோரிக்கைகளை நிர்வாகத்திடம் வைத்துள்ளனர்.

இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது பொது மேலாளர் சஞ்சய் வக்லு தமிழில் பேசக்கூடாது எனவும் ஆங்கிலம் அல்லது இந்தியில் பேசுமாறும்  அதிகாரிகள், தொழிலாளரிடையே காட்டமாக தெரிவித்துள்ளார். இதை கண்டித்தும், பொது மேலாளர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் நேற்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை தொழிலாளர்கள் கொட்டும் மழையில் குடை பிடித்தபடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தர்ணாவில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கூறுகையில், ‘வெடி மருந்து தொழிற்சாலையில் தமிழில் பேச தடை விதிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. எனவே பொது மேலாளர் மன்னிப்பு கேட்கும் வரை தர்ணா போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர். இதனால் தொழிற்சாலை வளாகம் பரபரப்பு காணப்பட்டது.


Tags : Aruvankadu , Aruvankadu, ammunition factory, ban on speaking, workers
× RELATED 3 ஆடுகளை தாக்கி கொன்று காற்றாலை நிழலில் ஓய்வெடுத்த பெண் சிங்கம்